ரேஷன் கடைகளில் மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு !!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து நியாய விலைக் கடைகளிலும், உள் மாநில பெயர்வு திறன் திட்டம் இன்று (01.02.2020) முதல் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தினை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, கோரம்பள்ளம் அமுதம் நியாயவிலைக் கடையில் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து, திருநெல்வேலி மாவட்டம் மற்றும் வெளி தாலுகாவை சேர்ந்த குடும்ப அட்டைதாரர்களுக்கு அத்திவாசிய பொருட்களை வழங்கினார். பின்னர் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:  தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவுப்படி, தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் உள் மாநில பெயர்வு திறன் திட்டம் பரிசார்த்த அடிப்படையில் இன்று (01.02.2020) முதல் துவக்கப்பட்டுள்ளது. நமது மாவட்டத்தில் 957 நியாயவிலைக்கடைகளில் சுமார் 4,93,842 குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர். 

கோரம்பள்ளம் பகுதியில் உள்ள அமுதம் நியாயவிலைக்கடையில் சுமார் 1246 குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர். அதேபோல் திருநெல்வேலி மாவட்டத்தில் சுமார் 500 நியாயவிலைக்கடைகளில் 4,50,000 குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர். இவர்கள் மாதம் தோறும் பதிவு செய்யப்பட்ட நியாயவிலைக்கடைகளில் அத்தியாவசிய பொருட்களை பெற்றுக் கொண்டு வந்தார்கள். தற்போது, உள் மாநில பெயர்வு திறன் திட்டத்தின் கீழ் ஒரே நாடு, ஓரே குடும்ப அட்டை என்ற அடிப்படையில் இந்தியா முழுவதும் குடும்ப அட்டையை நியாயவிலைக்கடையில் காண்பித்து அத்தியாவசிய பொருட்களை பெறும் திட்டத்தின் முன்னோட்டமாக செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டம் முதற்கட்டமாக தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் பரிசார்த்த முறையில் இன்று முதல் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டம் செயல்படுத்துவதில் ஏற்படும். சிக்கல்களை ஆராய்ந்து தீர்வு காணப்படும். 

பின்னர் இத்திட்டம் மாநில அளவிலும், பின்னர், இந்தியா முழுவதும் செயல்படுத்தப்பட உள்ளது. குறிப்பாக, நியாயவிலைக்கடையில் உள்ள அத்தியாவசிய பொருட்களின் இருப்பு கண்காணிக்கப்படுகிறது. மேலும், கூடுதலாக இருப்பு வைத்துக் கொள்ள என்ன நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும், தினந்தோறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் அத்தியாவசிய பொருட்களின் விவரங்கள் உள்ளிட்ட பல்வேறு விவரங்களை கண்காணித்து செயல்படுத்தப்படுகிறது. இன்று திருநெல்வேலி மாவட்டத்தை சார்ந்த ரவிசந்திரன் என்பவர் உள் மாநில பெயர்வு திறன் திட்டத்தின் கீழ் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோரம்பள்ளம் அமுதம் நியாயவிலைக்கடையில் அத்தியாவசிய பொருட்களை பெற்றுக் கொண்டார். அத்தியாவசிய பொருட்களை பெற்றுக் கொண்டமைக்காக ரவிசந்திரன் என்பவருக்கு கைபேசியில் குறுஞ்செய்தி பெறப்பட்டுள்ளது. 
குடும்ப அட்டைதாரர்கள் மண்ணெண்ணெய் மட்டும் தாங்கள் பதிவு செய்து உள்ள நியாயவிலைக்கடையில் பெற வேண்டும். குடும்ப அட்டைதாரர்கள் அரிசி, சர்க்கரை, பாமியில் உள்ளிட்ட பொருட்களை உள் மாநில பெயர்வு திறன் திட்டத்தின் மூலம் அருகில் உள்ள நியாயவிலைக்கடைகளில் பெற்றுக் கொள்ளலாம். குடும்ப அட்டைதாரர்கள் தங்கள் குடும்ப அட்டை வைத்துள்ள வருவாய் கிராமத்தில் உள்ள நியாயவிலைக்கடைகளிலும், நகர் புறத்தில் ஓரே வார்டு பகுதிகளிலும், அத்தியாவசிய பொருட்கள் இத்திட்டத்தின் மூலம் பெற இயலாது. பொது மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் பெறப்படும் போது ஏற்படும் சிரமங்களை தவிர்ப்பதற்காகவும், பிற மாவட்டங்களில் குடும்பத்தார் நிலை காரணமாக தற்காலிகமாக பணியாற்றும் பொது மக்களும் எளிதான முறையில் அத்தியாவசிய பொருட்கள் பெற்று பயன்பெறும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

அதனை தொடர்ந்து, உள் மாநில பெயர்வு திறன் திட்டத்தின் கீழ், தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டம் வட்டம், ஓட்டப்பிடாரம் வட்டம் மற்றும் ஏரல் பகுதிகளில் இருந்து பல்வேறு குடும்ப அட்டைதாரர்கள் தங்களது குடும்ப அட்டைகளை காண்பித்து தேவையான அத்தியாவசிய பொருட்களை பெற்றுக் கொண்டார்கள். இந்நிகழ்ச்சியில் கூடுதல் ஆட்சியர் (வருவாய்) விஷ்ணு சந்திரன், மாவட்ட வழங்கல் அலுவலர் அமுதா, தனி வட்டாட்சியர் (குடிமை பொருள் வழங்கல்) வதனாள், வருவாய் ஆய்வாளர் சுகுனா மற்றும் அலுவலர்கள், பொது மக்கள் கலந்து கொண்டனர்.