தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி தொட்டிலோவன்பட்டி சோதனை சாவடியில் வெளி மாவட்டங்களில் இருந்து வருகை தரும் நபர்களை சோதனை செய்யும் பணிகளை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, நேற்று நேரில் ஆய்வு செய்தார்.
வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து e pass பெற்று வருபவர்கள் முறையாக அனுமதி பெற்று வருகிறார்களா, போலியான e pass பயன்படுத்தப்படுகிறதா, கியுஆர் கோடு ஸ்கேன் உண்மை தன்மை பரிசோதிக்கப்படுகிறதா என்பதை ஆய்வு செய்தார்.
மேலும், மீனாட்சிபுரம் விலக்கு பகுதியில் உள்ள கிளைச்சாலை பகுதி வழியாக செல்பவர்களை தடுக்கும் வகையில் முள்வேலி அமைக்கப்பட்டுள்ளதை பார்வையிட்டார்.
மேலும் விருதுநகர் இருந்து கோவில்பட்டி எல்லை பகுதி வரை காரில் வந்து பின்பு நடைபயணமாக வருகை தந்த 10 நபர்களை மாவட்ட ஆட்சியர் அவர்கள் முன் அனுமதி பெற்று வருகிறார்களா என்பதை கேட்டு எந்த அனுமதியும் இல்லாததால் அவர்களை உடனடியாக உரிய விசாரணை செய்ய காவல்துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
பின்னர் மாவட்ட ஆட்சியர் செய்தியாளர்களிடம் தெரிவித்தாவது:
தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை 19,893 நபர்களிடம் மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளது. இதில் 487 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 329 நபர்கள் சிகிச்சை பெற்று பூரண குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளார்கள்.
தற்போது 156 நபர்கள் சிசிக்சை பெற்று வருகிறார்கள். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் மட்டுமின்றி அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் தொற்று சிகிச்சை அளிப்பதற்கு ஏதுவாக சுமார் 1,600 படுக்கைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
கடந்த ஒரு வாரமாக கோவில்பட்டி பகுதியில் பொய்யான தகவல்களை தெரிவித்து e pass பெற்றுள்ளார்கள் எனவும், e pass இல்லாமல் வட்டத்திற்குள் பல்வேறு நபர்கள் வருவதாகவும் கிடைக்கப் பெற்ற தகவல் அடிப்படையில் கோவில்பட்டி தொட்டிலோவன் பட்டியில் உள்ள சோதனை சாவடியில் இன்று நேரில் ஆய்வு செய்யப்பட்டது. சென்னை மாவட்டத்தில் இருந்து நமது மாவட்டத்திற்கு வருகை தரும் நபர்களை சோதனை சாவடியில் பரிசோதனை செய்து சோதனை சாவடி அருகில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட முகாமில் தங்க வைக்கப்பட்டு கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்படுகிறது.
கொரோனா தொற்று இல்லாதவர்கள் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்படுவர். கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு உரிய சிகிச்சை அளிக்கப்படும்.
நமது மாவட்டத்தில் கோவில்பட்டி, எட்டயபுரம், வேம்பார் ஆகிய 3 முக்கிய இடங்களில் சோதனை சாவடி அமைக்கப்பட்டு கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சோதனை சாவடி முன்பாக பல்வேறு நபர்கள் வாகனத்தில் பயணம் செய்து காரில் இறங்கி நடந்து வருவதாக தகவல் பெறப்பட்டது.
இதனை தடுக்கும் வகையில் கூடுதலாக காவல் துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் 7 குறுக்கு சாலை பகுதிகளில் கூடுதல் காவல் துறையினர் நியமிக்கப்பட்டு முறையின்றி e pass பெறுபவர்களை கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சோதனை சாவடியில் பணியாற்றும் அலுவலர்கள் மற்றும் காவல் துறை பணியாளர்கள் தங்களது கைபேசியில் கியுஆர் கோடுகள் ஸ்கேன் செய்யும் மொபைல் ஆப் பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம் e pass உள்ள கியுஆர் கோடுகள் ஸ்கேன் செய்து வழங்கப்பட்ட e pass உண்மை தன்மை கண்டறியப்படுகிறது. நேற்றைய தினம் கோவில்பட்டியில் ஆசிரியர் ஒருவர் மருத்துவ காரணங்களுக்காக பொய்யான தகவல்களை தெரிவித்து சென்னை பகுதிகளுக்கு சென்று பொது மக்களை அழைத்து வந்தார்
என்ற தகவலின் அடிப்படையில் அவர்மீது தொற்று நோய் பரவல் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் சென்னையில் இருந்து 9 நபர்களை அழைத்து ஒருவர் கிராம
நிர்வாக அலுவலரிடம் பொய்யான சான்றிதழ் பெற்று நமது மாவட்டத்திற்கு வருகை தந்தார்கள்.
அவர்களை கண்டறிந்து அவர்கள் மீதும் தொற்று நோய் பரவல் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திற்கு வருகை தந்த மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த 188 நபர்களும், குஜராத் போன்ற மாநிலங்களை சேர்ந்தவர்களுக்கும் கொரோனா தொற்று இருப்பதை உறுதி செய்யப்ட்டது.
சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து வந்த 88 நபர்களுக்கும், அவர்களுடன் தொடர்பில் உள்ள 50 நபர்களுக்கு கொரோனா அறிகுறி இருப்பதை உறுதி செய்யப்பட்டது.
நமது மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட நபர்களின் பயண விவரங்கள் மற்றும் அவர்களுடன் தொடர்புடைய நபர்கள் ஆகியவர்களின் விவரங்கள் சேகரித்து பரிசோதனை செய்யப்படுகிறது.
தமிழக அரசின் வழிகாட்டுதலின்படி கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் நமது மாவட்டத்தில் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதால் சமூக பரவல் ஏற்படவில்லை என தெரிவித்தார்.
ஆய்வின்போது உதவி ஆட்சியர் (பயிற்சி) பிரித்திவிராஜ், கோவில்பட்டி கோட்டாட்சியர் விஜயா, கோவில்பட்டி வட்டாட்சியர் மணிகண்டன், வட்டார வளர்ச்சி அலுவலர் வசந்தா, காவல் துறை ஆய்வாளர் சுகுனாதேவி, கோவில்பட்டி நகராட்சி ஆணையர் ராஜாராம் மற்றும் சுகாதாரத்துறை அலுவலர்கள் உள்ளனர்.