பாதுகாப்பான முறையில் மருத்துவ கழிவுகளை அகற்ற வேண்டும் – மாவட்ட ஆட்சியர்

தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா நோயாளிகளின் மருத்துவ கழிவுகளை பாதுகாப்பாக அகற்றுதல் தொடர்பாக மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் வழிகாட்டுதல்களை பின்பற்ற வேண்டும் என மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஆட்சியர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், அனைத்து தனிமைப்படுத்தப்பட்ட முகாம்கள், வீடுகள் / வீட்டு பராமரிப்பு வசதிகள் மற்றும் பொதுமக்கள் இவை அனைத்தும் கோவிட் – 19 பாதிக்கப்பட்ட நோயாளிகளின் மருத்துவ கழிவுகளை கையாளுதல், சேமித்தல், போக்குவரத்து செய்தல் மற்றும் வெளியேற்றுதலில் கீழ்கண்ட நெறிமுறைகளை பின்பற்றுமாறு கோரப்படுகிறது.

செய்யவேண்டியவை

  1. தனிமைப்படுத்தப்பட்ட மையங்கள் அல்லது வீடுகள் / வீட்டு பாரமரிப்பு வசதிகளின் கடமை
  2. கோவிட்-19 நோய் தொற்று காரணமாக தனிமைபடுத்தப்பட்ட மையங்கள் மற்றும் முகாம்களில் உள்ளவர்களிடம் இருந்து மருத்துவக்கழிவுகள் உருவாக்கப்பட்டால் அதனை தனியாக பிரித்து மருத்துவக்கழிவுகள் சேகரிக்கப்படும் மஞ்சள் நிற கொள்கலன்களிலோ பைகளிலோ சேகரித்து, உள்ளாட்சி அமைப்புகளின் அனுமதி பெற்ற துப்புரவுபணியாளர்களிடம் முறையாக ஒப்படைக்க வேண்டும்.

பொதுமக்களின் கடமை

  1. கோவிட்-19 நோய் தொற்றுக் காரணமாக வீடுகளில் தனிமை படுத்தப்பட்டுள்ளவர்கள் உபயோகித்த கை உறைகள் மற்றும் முகக்கவசங்களை அகற்றுவதற்கு முன்பு 72 மணி நேரம் காகித பைகளில் பாதுகாப்பாக வைத்திருந்து பின்னர் பொது கழிவுகளுடன் வெளியேற்ற வேண்டும்.
  2. முகக்கவசங்களை மறு உபயோகப்படுத்த முடியாத வண்ணம் வெட்டி துண்டுகளாக்கி வெளியேற்றபட வேண்டும்.

செய்யக்கூடாதவை

  1. பிறகழிவுகளுடன் கோவிட்-19 நோயாளிகளின் கழிவுகளை சேர்க்கவோ சேமிக்கவோ கூடாது
  2. 24 மணிநேரங்களுக்கு மேல் கோவிட்- 19 நோயாளிகளின் கழிவுகளை சேமித்து வைத்தல் கூடாது.
  3. கோவிட்- 19 அறிகுறியுள்ள பணியாளர்களை பணிபுரிய அனுமதிக்கக் கூடாது.
  4. சர்வதேச பரவலாகியுள்ள கோவிட்- 19 உயிர்க்கொல்லி நோயிடம் இருந்து மீள மேற்கண்ட வழிகாட்டுதல்களின் படி தனிமைப்படுத்தப்பட்ட முகாம்கள் அல்லது வீடுகளில் பொதுமக்கள் மேற்கூறிய நெறிமுறைகளை பின்பற்றி மருத்துவ கழிவுகளை கையாள வேண்டும்.

மேற்கண்ட மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் வழிகாட்டுதல்களை பின்பற்ற வேண்டும் என மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, தெரிவித்துள்ளார்.