கோவில்பட்டியில் அனுமதியின்றி வைக்கப்பட்ட மீன் கடைகள் அகற்றம்

கோவில்பட்டி பழனி ஆண்டவர் கோயில் தெருவில் அனுமதியின்றி வைக்கப்பட்ட மீன் கடைகளை வருவாய் துறையினர் நேற்று அகற்றினர்.

கோவில்பட்டி நகராட்சிக்கு உள்பட்ட பல்வேறு பகுதிகளில் அனுமதியின்றி கடைகள் வைக்கப்படுவதாக கிடைத்த தகவலையடுத்து, போலீஸார் மற்றும் வருவாய் துறையினர், நகராட்சி சார்பில் ரோந்து பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், வட்டாட்சியர் மணிகண்டன் தலைமையில் வருவாய் துறையினர் பழனி ஆண்டவர் கோயில் தெருவில் நடத்திய ரோந்து பணியின்போது அங்கு அனுமதியின்றி மீன் கடைகள் வைத்திருப்பது தெரியவந்தது.

அதையடுத்து கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் சுதேசன் தலைமையில் போலீஸார் பாதுகாப்புடன் நகராட்சி துப்புரவு பணியாளர்கள் அனுமதியின்றி வைக்கப்பட்ட கடைகளை அகற்றினர்.