சாத்தான்குளம் ஒன்றியத்தில் 5 ஊராட்சிகளில் அட்சய அன்ன சுரபி திட்டம் – திட்ட இயக்குநர் தனபதி தொடங்கி வைத்தார்.

சாத்தான்குளம் ஊராட்சி ஒன்றியத்தில் மாவட்ட திட்ட இயக்குநர் தனபதி வருகை தந்து அழகப்பபுரம் ஊராட்சியில் பசுமை வீடு கட்டும் பணியை பார்வையிட்டார். பின்னர் படுக்கப்பத்து ஊராட்சியில் அட்சய அன்ன சுரபி என்னும் திட்டத்தை தொடங்கி வைத்தார்.

அதன்படி அரிசி மற்றும் பருப்பு தனித்தனி பாத்திரங்களில் வைக்கப்பட்டிருக்கும்.மிகவும் ஏழ்மை நிலையில் இருப்பவர்கள் காலை 10.00 மணியிலிருந்து 11.00 மணிக்குள் ஊராட்சி மன்றத்தை அணுகினால் அவர்களுக்கு 1 படி மற்றும் 1/4 படி பருப்பு வழங்கப்படும். பொருளை வாங்கிச் செல்பவர்களின் விவரம் வெளியே தெரியபடுத்தப்பட மாட்டாது எனவும், ஆனால் அட்சயப் பாத்திரத்திற்கு நன்கொடை வழங்குபவர்களின் விவரம் பிரபலப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந் நிகழ்ச்சியில் படுக்கப் பத்து ஊராட்சித் தலைவர் தனலட்சுமி சரவணன், நன்கொடையாளர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

இதைதொடர்ந்து கொம்மடிக்கோட்டை ஊராட்சியில் திட்ட இயக்குநர், அட்சய அன்ன சுரபி திட்டம் தொடங்கி வைத்து ஒரு தெருவிலுள்ள 30 பேர்களுக்கு குப்பைகளை பிரித்து வழங்கும் வகையில் பச்சை மற்றும் சிவப்பு நிறங்களில் குப்பைக் கூடைகள் வழங்கினார்.

நிகழ்ச்சியில் ஊராட்சித் தலைவர் ராஜ புனிதா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

இதையடுத்து புத்தன் தருவை ஊராட்சியில் அட்சய அன்ன சுரபி திட்டம் தொடங்கி வைத்து 100 பேர்களுக்கு பச்சை மற்றும் சிவப்பு நிற குப்பைத் தொட்டிகள் வழங்கினார்.

இதில் புத்தன்தருவை ஊராட்சித் தலைவர் சுலைகாபீவி, துணைத் தலைவர் பிர்தெளஸ் பங்கேற்றனர்.

இதேபோல் சாஸ்தாவிநல்லூர் , முதலூர் ஊராட்சியில் அட்சய அன்ன சுரபி திட்டத்தை திட்ட இயக்குநர் தொடங்கி வைத்தார்.

இதில் ஊராட்சித் தலைவர்கள் சாஸ்தாவிநல்லூர் திருக்கல்யாணி, முதலூர் பொன்முருகேசன், ஒன்றியக்குழு உறுப்பினர் மீனா, துணைத் தலைவர்கள் ராபின்சன், சுபாஷ், விவசாய சங்கத் தலைவர் காமராஜ், கூட்டுறவு சங்கத் தலைவர் லூர்துமணி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

மேலும் திட்ட இயக்குநர் ஒன்றியத்தில் நடைபெற்றும் வரும் பசுமை வீடுகள், பிரதம மந்திரி நினைவு வீடுகள், கழிப்பறை கட்டும் பணி ஆகியவற்றையும் ஆய்வு செய்தார். இதில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாண்டியராஜ், செல்வி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.