டோக்கன் முறையில் மது விற்க முடிவு : தமிழக அரசு

கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் கடந்த 7-ந் தேதி முதல் டாஸ்மாக் கடைகளை திறக்க அரசு அனுமதி அளித்தது. அதன்பேரில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டது. பின்பு பல தரப்பில் இருந்து எதிர்ப்புகள் எழும்பியதால் விசாரணைக்கு பின் உயர் நீதிமன்றம் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட்டது. இதனை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் உயர் நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தது. இதையடுத்து தூத்துக்குடி மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளை திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நோய் கட்டுப்பாட்டு மண்டலங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளை தவிர மற்ற கடைகளை திறப்பதற்கு அனைத்து பணிகளும் நடந்து வருகின்றன. இதனால் மதுப்பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

டாஸ்மாக் கடைகளில் அதிக அளவில் கூட்டம் கூடுவதை தவிர்ப்பதற்காக டோக்கன் வழங்கப்படுகிறது. டாஸ்மாக் கடை முன்பு போலீஸ் மூலம் டோக்கன் வழங்கப்படுகிறது. ஒவ்வொரு டோக்கனிலும், கடை எண், தேதி, எத்தனை மணிக்கு வர வேண்டும் என்பன உள்ளிட்ட விவரங்கள் இடம்பெறும். ஒவ்வொரு மணி நேரத்துக்கும் சுமார் 70 டோக்கன்கள் வரை வழங்கப்படுகிறது. குறிப்பிட்ட மணி நேரத்துக்குள் வந்து மட்டுமே மதுபானத்தை பெற்றுக்கொள்ள முடியும். இதற்கான ஏற்பாடுகளை டாஸ்மாக் அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.