மாணவ, மாணவியர்களுக்கு கொரோனா சிறப்பு உதவியாக அரிசி, பருப்பு மற்றும் மளிகை பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி

கோவில்பட்டியில் வேலாயுதபுரம் நாடார் உறவின்முறை சங்கத்தின் மூலம் நிர்வகிக்கப்பட்டு வரும் வள்ளிமுத்து நாடார் உயர்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு கொரோனா சிறப்பு உதவியாக அரிசி, பருப்பு மற்றும் மளிகை பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளி செயலாளர் வேல்முருகேசன் தலைமை வகித்தார். மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி முன்னிலை வகித்தார். உயர் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் துரை வரவேற்புரையாற்றினார்.இதில் சிறப்பு அழைப்பாளராக தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ கலந்து கொண்டு 500 மாணவ-மாணவிகளின் குடும்பங்களுக்கு உணவு பொருள்களை வழங்கினார். இதில் கோவில்பட்டி நாடார் உறவின்முறை சங்க தலைவர் ஏ.பி.கே.பழனிச்செல்வம், பொது நல மருத்துவமனை தலைவர் திலகரத்தினம், எஸ்.எஸ்.டி.எம். கல்லூரி செயலாளர் கண்ணன், பள்ளி தலைவர் ரவீந்தர ராஜா, பள்ளி ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கு கபசுரகுடிநீரும் வழங்கப்பட்டது.

இதையெடுத்து கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் கொரோனா தொற்று நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று பூரண குணம் அடைந்த நபர்களை வீட்டுக்கு வழி அனுப்பி வைக்கும் நிகழ்ச்சி இ நடைபெற்றது. இதில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ கலந்துகொண்டு, 3 பேருக்கும் தனது சொந்த நிதியில் இருந்து தலா 5 ஆயிரம் வழங்கினார். மேலும் அவர்களுக்கு பழங்கள், கபசுரகுடிநீர் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை ஊக்குவிக்கும் சித்த மருத்துவ பொருள்களும் வழங்கப்பட்டது. இதில் மாவட்ட ஆட்சியர் சந்தீப்நந்தூரி, கோவில்பட்டி கோட்டாட்சியர் விஜயா, கோவில்பட்டி நகராட்சி ஆணையர் ராஜாராம், சுகாதார பணிகள் இணை இயக்குநர் (பொ) மருத்துவர்.பொன்இசக்கி, கோவில்பட்டி சுகாதார பணிகள் துணை இயக்குநர் மருத்துவர்.அனிதா, கோவில்பட்டி வட்டாட்சியர்; மணிகண்டன், கோவில்பட்டி மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் கலைக்கதிரவன், கோவில்பட்டி அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் மருத்துவர்.கமலவாசன், உறைவிட மருத்துவர் மருத்துவர்.பூவேஷ்வரி, மருத்துவர் வெங்கடேஷ், அறங்காவலர் குழு உறுப்பினர் ராமசந்திரன், அதிமுக நகர செயலாளர் விஜயாபாண்டியன், ஒன்றிய செயலாளர் அய்யாத்துரைபாண்டியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதையெடுத்து கோவில்பட்டி நகராட்சி அலுவலகத்தில் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக கிருமி நாசினி தெளிக்கும் பணிகளையும் பார்வையிட்ட அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ கோவில்பட்டி கதிரேசன் பகுதியில் புதிய தார்சாலை அமைக்கும் பணிகள் நடைபெறுவதை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் கோவில்பட்டி நகராட்சி அருகில் உள்ள உள்ள அம்மா உணவகத்தில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் உணவுகளை பார்வையிட்டார்.

இதன் பின்னர் அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ செய்தியாளர்களிடம் பேசுகையில் கொரோனாவை தடுக்க தமிழக அரசு எடுத்த நடவடிக்கைகளை மக்கள் பாராட்டி வருகின்றனர்.தமிழக அரசின் நடவடிக்கைகள் குறித்து பொது மக்கள், சமூக ஆர்வலர்கள், பொது நலவாதிகள் இதுவரை குற்றம் குறை சொல்லவில்லை.திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எதிர்கட்சி தலைவர் என்ற முறையில் ஆலோசனைகள் கூறலாம் அது வரவேற்றக கூடியது தான்.சட்டமன்றம் கூடியது போது சட்டமன்றத்தினை ஒத்திவைக்க வேண்டும் என்று எதிர்கட்சி தலைவர் வலியுறுத்தினார். ஆனால் சட்டமன்றம் என்பது மக்களின் பிரச்சினைகள் குறித்து விவாதம் செய்து நடவடிக்கை எடுப்பதற்கு தான் என்று முதல்வர் தெரிவித்தார்.மக்கள் பிரதிநிதிகள் மக்களுக்கு பிரச்சினை என்றதும் பின்வாங்க கூடாது என்பதற்கு தான் சட்டமன்றம் நடைபெற்று கொண்டு இருக்கிறது என்ற கருத்தினை முதல்வர் கூறினார்.அந்த நேரத்திலும் சட்டமன்றத்தினை ஒத்திவைத்து விட்டு, நாம் பாதுகாப்பாக செல்ல வேண்டும் என்று கூறியவர் எதிர்க்கட்சி தலைவர்,சட்டமன்றம் ஒத்திவைப்பதற்கு ஒரு நாள் முன்பாகவே இனி நாங்கள் சட்டமன்றத்தில் கலந்து கொள்ள மாட்டோம் என்று சுயநலத்துடன் கூறியவர்கள் திமுகவினர்,ஆனால் தமிழக முதல்வர் தினமும் தலைமை செயலகம் சென்று மூத்த அமைச்சர்கள், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.ஏதாவது அரசியல் செய்ய வேண்டும் என்பதற்காக மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டுகளை சொல்கிறார் என்றார்

சசிகலா வெளியே வந்தவுடன் அதிமுகவில் மாற்றங்கள் எதுவும் இருக்குமா என்று கேள்விக்கு அதை பற்றி யோசிக்க நேரமில்லை, கொரோனாவினால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அரசியல் சம்பந்தப்பட்ட கேள்விக்கு இடமில்லை என்றும், அந்த சிந்தனையே ஆளும் அரசுக்கும், யாரூக்கும் இல்லை என்றார்.

மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கி விதித்துள்ள விதிமுறைகளை மீறி ஊரடங் காலத்தில் தனியார் நிதி நிறுவனங்கள் கடன் வசூலித்தல், அதிக வட்டி வசூலிக்க கூடாது என்று மாவட்ட நிர்வாகங்கள் மூலமாக அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதையும் மீறி வசூல் செய்வதாக புகார் வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.