இறப்பு சான்றிதழ்களை ஆய்வு செய்ய வேண்டும்: தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டு இணை நோய்களால் இறந்தவர்களின் இறப்பு சான்றுகளை ஆய்வு செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை பழைய வண்ணாரப்பேட்டையை சேர்ந்த வழக்கறிஞர் ஸ்ரீராஜலட்சுமி என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், கோவிட் தொற்று பாதித்து தன்னுடைய சக வழக்கறிஞர் கண்ணன் என்பவர் உயிரிழந்த நிலையில், அவர் மூச்சுத்திணறலால் இறந்தார் என சான்று வழங்கப்பட்டது. ‘கோவிட் மரணம்’ என இறப்பு சான்றிதழில் குறிப்பிடாததால், பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கும், குடும்பத்திற்கும் அரசின் நிதியுதவி கிடைக்கப்பெறுவது தடைபடுவதாகவும், கோவிட்டால் ஏற்படும் மரணத்தை இறப்புச் சான்றிதழில் குறிப்பிடவேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு, கோவிட் மரணம் முறையாக பதிவு செய்யப்படவில்லை என நாடு முழுவதும் புகார்கள் வந்துகொண்டிருக்கிறது எனக் குறிப்பிட்டனர். மேலும், ‛இறப்பு பற்றி தெளிவான பதிவு இருந்தால்தான் தொற்றை சமாளிக்க, நிவாரணம் வழங்க உதவியாக இருக்கும்.

கோவிட் காலத்தில் இணைநோயால் இறந்தவர்களின் இறப்பு சான்றிதழ்களை நிபுணர்கள் மூலம் ஆய்வு செய்யவேண்டும். இந்த ஆய்வு செய்தது குறித்த ஆரம்பகட்ட அறிக்கையை 28-ம் தேதிக்குள் தாக்கல் செய்யவேண்டும்,’ என தமிழக அரசுக்கு உத்தரவிட்டு, வழக்கை 28-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.