தர்பார் – நாளை திரைக்கு வருகிறது!!!

ரஜினிகாந்த் நடிப்பில் நாளை வெளியாகவுள்ள தர்பார் படத்தின் சிறப்பு காட்சிக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. லைகா நிறுவனம் தயாரிப்பில், ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி, நயன்தாரா, சுனில் ஷெட்டி, நிவேதா தாமஸ், யோகி பாபு உள்ளிட்டோர் நடித்திருக்கும் தர்பார் படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நாளை ஜனவரி 9ம் தேதி திரைக்கு வருகிறது.

தர்பார் படத்தின் சிறப்பு காட்சிக்கு அனுமதி கிடைக்குமா? கிடைக்காதா என ரசிகர்கள் தவித்துக் கொண்டிருந்த நிலையில், தமிழக அரசு தற்போது அனுமதி அளித்துள்ள செய்தி கிடைத்துள்ளது.

ஹெலிகாப்டருக்கு அனுமதி இல்லை : சேலம் ரசிகர்கள் ரஜினியின் தர்பார் கட்-அவுட்டுக்கு ஹெலிகாப்டர் மூலம் மலர் தூவி பிரம்மாண்டமாக தர்பார் படத்தின் முதல் காட்சியை கொண்டாட திட்டமிட்டு காவல்துறையிடம் அனுமதி கோரியிருந்தனர். ஆனால், கடைசி நேரத்தில் பாதுகாப்பு காரணங்களை கருத்தில் கொண்டு அனுமதி மறுக்கப்பட்டது.

சந்தேகத்தில் ரசிகர்கள் : அதேபோல தர்பார் சிறப்பு காட்சிக்கும் அனுமதி மறுக்கப்படும் என கசிந்த வதந்திகளால் சந்தேகத்திலும், வருத்தத்திலும் ரஜினி ரசிகர்கள் இருந்தனர். ஆனால், தற்போது சந்தோஷமடைந்துள்ளனர்.

தர்பார் பொங்கல் : பொங்கலை முன்னிட்டு நாளை வெளியாகவுள்ள தர்பார் படத்திற்கு ஜனவரி 9ம் தேதி முதல் 14ம் தேதி வரை சிறப்பு காட்சிகளை வெளியிட அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

சென்னையில் சூப்பர்ஸ்டார் : தர்பார் படம் நாளை ரிலீசாவதை முன்னிட்டு ஹைதராபாத்தில் ஷூட்டிங்கில் இருந்த ரஜினிகாந்த் சென்னை திரும்பியுள்ளார். ஏர்போர்ட்டில் ரசிகர்களை சந்தித்த ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

டிரெண்டிங் தர்பார் : படம் நாளை வெளியாகவுள்ள நிலையில், #DarbarFromTomorrow, #DarbarManiaBegins என்ற ஹாஷ்டேக்குகள் ட்விட்டரில் டிரெண்டாகி வருகின்றன. ரஜினி ரசிகர்கள் தர்பார் படத்திற்காக வாங்கிய டிக்கெட்டுக்களுடன் புகைப்படங்களை பதிவிட்டு வருகின்றனர்.

ஹவுஸ்ஃபுல் தர்பார் : டிக்கெட்டு விற்பனை தொடங்கியதில் இருந்து விறுவிறுவென அனைத்து டிக்கெட்டுகளும் வியாழன் முதல் ஞாயிறு வரை விற்றுத் தீர்ந்து வருகின்றன. பல தியேட்டர்களில் ஹவுஸ்ஃபுல் ஆகியுள்ளது.