இரு சக்கர வாகன பெருக்கத்தால் முடங்கிய சைக்கிள் பஞ்சர் பார்க்கும் தொழில்!!!

கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு அனைத்து சிறிய நகரங்கள் முதல் பெரிய நகரங்கள் வரை சைக்கிள் கடைகள் அதிகம் இருந்தன. குறிப்பாக ஒரு பேரூராட்சியில் 5க்கும் மேற்பட்ட வாடகை சைக்கிள் கடைகள் இருக்கும். கிராமங்களில் இருந்து நகரங்களுக்கு தினசரி வேலைக்காக வரும்போது வாடகைக்கு சைக்கிள் எடுத்து வருவார்கள். ஒரு இரவுக்கு, பின்பக்கம் கேரியர் இல்லாத சைக்கிளுக்கு ரூ.2 , கேரியர் உள்ள சைக்கிளுக்கு ரூ.3 வாடகை கொடுப்பார்கள். தற்போது டூவீலர் பெருக்கத்தால் சைக்கிள் பயன்பாடு குறைய ஆரம்பித்தது. முன்பெல்லாம் ஒரு கிராமத்திற்கு ஒன்று அல்லது இரண்டு டூவீலர்கள்தான் இருக்கும். தற்போது அனைத்து வீடுகளிலும் டூவீலர்கள் உள்ளன. இதனால் வாடகை சைக்கிள் கடைகள் மூடப்பட்டு விட்டன. சைக்கிள் மெக்கானிக்குகளுக்கு போதிய வருமானம் கிடைக்காததால், ஒரு சிலர் டூவீலர் பஞ்சர் கடை மற்றும் சிறிய மெக்கானிக் பணிகளை செய்து பிழைப்பை ஓட்டி வருகின்றனர். தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் எல்லா இடங்களிலும் இந்த நிலை காணப்படுகிறது.

இதுகுறித்து சைக்கிள் பஞ்சர் பாக்கும் தொழிலாளி கூறியதாவது: 20 ஆண்டுகளுக்கு முன்பு வாடகை சைக்கிள் கடைகளால் வருமானம் அதிகம் கிடைத்தது. சிறியவர் முதல் பெரியவர் வரை சைக்கிள் பயன்படுத்தினர். இதனால் சைக்கிள் உதிரி பாகம் மாற்றுவது, சக்கரங்களுக்கு கோட்டம் எடுப்பது, செயின் பிரச்னையை நீக்குதல் உள்ளிட்ட பணிகள் தொடர்ந்து கிடைத்தன. ஒரு நாளைக்கு சிறிய நகரங்களில் ரூ.500 முதல் ரூ.1,000 வரை வருமானம் கிடைத்தது. பெரிய நகரங்களில் ஒரு நாளைக்கு ரூ.1,000 முதல் ரூ.2,000 வரை கிடைத்தது. டூவீலர் பயன்பாடு அதிகரித்த வேகத்தில், சைக்கிள் பயன்பாடும் குறையத்தொடங்கியது. தற்போது சைக்கிள் பயன்பாடு முற்றிலும் இல்லாமல் போய்விட்டது. இதனால் எங்களின் தொழில் பெரிதும் பாதிப்பு ஏற்பட்டது.