தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணியில் ஊழல்” – எம்எல்ஏக்கள் கீதா ஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு

தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் வாழ்வாதாரம் இழந்துள்ள மக்களுக்கு உதவி செய்யும் பொருட்டு திமுக சார்பில் “ஒன்றிணைவோம் வா” எனும் திட்டத்தின் கீழ் திமுக மாவட்ட பொறுப்பாளர்கள், தொண்டர்கள் நலத்திட்ட உதவிகளை செய்து வருகின்றனர்.

அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் திமுக வடக்கு மாவட்ட பொறுப்பாளர் கீதாஜீவன் எம்.எல்.ஏ. ஏற்பாட்டின் பேரிலும், தெற்கு மாவட்ட பொறுப்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. ஏற்பாட்டின் பேரிலும் ஊரடங்கினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான அரிசி, பருப்பு, காய்கறிகள், மருந்து, மாத்திரைகள், உணவு ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் “ஒன்றிணைவோம் வா” திட்டத்தின் கீழ் பெறப்பட்ட கோரிக்கை மனுக்களில் அரசு தரப்பிலிருந்து உதவிகள் செய்யத்தக்கவைகளை அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லும் வகையில் கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைப்பதற்காக திமுக எம்.எல்.ஏ.க்கள் கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன், சண்முகையா ஆகியோர் நேற்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்தனர். தொடர்ந்து அவர்கள் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரியை சந்தித்து கோரிக்கை மனுக்களை சமர்ப்பித்தனர்.

இது குறித்து கீதா ஜீவன் எம்எல்ஏ செய்தியாளர்களிடம் பேசுகையில்.

’’தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணிகள் என்ற பெயரில் அதிகாரிகள் ஊழல் செய்கின்றனர்‌. குறிப்பாக கிருமிநாசினி தெளித்தல், லைசால், முகக்கவசம் வாங்குவதில் பஞ்சாயத்து மற்றும் ஒன்றியங்களுக்கு வழங்கப்பட்ட நிதிகளை கொண்டு டெண்டர் ஒதுக்கீடு செய்து ஊழல் செய்துள்ளனர். இதற்கான பதில் எதிர்காலத்தில் வரும்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி “ஒன்றிணைவோம் வா” திட்ட முன்னெடுப்பு சார்பில் தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா நலத்திட்ட உதவிகள் செய்து வருகிறோம். அரசால் செய்யமுடியாத உதவிகளை திமுக கழகம் மக்களுக்கு செய்து வருகிறது. அதில் அரசால் செய்யத்தக்க உதவிகள்‌ அடங்கிய கோரிக்கை மனுக்களை திமுக தலைவர் உத்தரவுப்படி மாவட்ட ஆட்சியரிடம் வழங்கி வருகிறோம்.

இதில் 3123 கோரிக்கை மனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டது. தற்போது இரண்டாம்கட்டமாக 17 ஆயிரத்து 753 மனுக்கள் சமர்பிக்கப்பட்டுள்ளது. இந்த மனுக்களை தாலுகா வாரியாக பிரித்து அனுப்பப்பட்டு நடவடிக்கை எடுப்பதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார்’’ என்றார்.