3 நபர்களுக்கு கொரானோ வைரஸ் நோய் உறுதி – தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் கஸ்பா நியாயவிலைக்கடையில் கொரானோ வைரஸ் நிவாரண தொகை ரூ.1000ம் மற்றும் ஏப்ரல் மாதத்திற்கான ரேசன் பொருட்கள் பொது மக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டதையும், காயல்பட்டிணம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் கிருமி நாசினி தெளிக்கும் பணிகள் மற்றும் சுகாதாரத்துறையின் மூலம் வீடு, வீடாக சென்று உடல் பரிசோதனை செய்யும் பணிகளை மாவட்ட ஆட்சியர் .சந்தீப் நந்தூரி இன்று (02.04.2020) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மேலும், ஸ்ரீ தளவாய் சுவாமி கோவில் தெரு பகுதியில் தனிமைப்படுத்தப்பட்ட நபர்களின் வீடுகளுக்கு தன்னார்வலர்கள் நேரடியாக சென்று கொரானோ வைரஸ் நிவாரண தொகை ரூ.1000-ம் மற்றும் ஏப்ரல் மாதத்திற்கான ரேசன் பொருட்கள் வழங்கும் பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதனை தொடர்ந்து, நியாயவிலைக் கடைகளுக்கு நேரடியாக வந்து ரேசன் பொருட்கள் பெற முடியாத முதியோர்களுக்கு தன்னார்வலர்கள் மூலம் கொரானோ வைரஸ் நிவாரண தொகை ரூ.1000-ம் மற்றும் ஏப்ரல் மாதத்திற்கான ரேசன்; பொருட்கள் வழங்கும் பணிகளையும் ஆய்வு செய்தார்.

தொடர்ந்து மாவட்ட ஆட்சியர், காயல்பட்டிணம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் நகராட்சி பணியாளர்கள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரானோ வைரஸ் நோய் தடுப்பு பணிகளையும், காயல்பட்டிணம் நகராட்சி விசாகா லட்சுமி கோவில் தெரு பகுதியில் சுகாதாரத்துறையின் மூலம் வீடு, வீடாக சென்று உடல் பரிசோதனை மற்றும் சளி, காய்ச்சல், இருமல் அறிகுறியுடன் உள்ள நபர்களின் விவரங்களை சேகரிக்கும் பணிகளையும் பார்வையிட்டு, அந்த வீட்டில் கர்ப்பினி பெண்கள், முதியோர்கள், குழந்தைகள் இருந்தால் அதிக முக்கியத்துவம் அளித்து அவர்களையும் உடல் ஆரோக்கியம் குறித்து தகவல் சேகரிக்க வேண்டும்.

மேலும், காயல்பட்டிணம் நகராட்சி பேரூந்து நிலையம் அருகில் உள்ள நியாயவிலைக்கடை மற்றும் கே.டி.எம் தெரு பகுதியில் அமைந்துள்ள நியாயவிலைக்கடைகளிலும் குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரானோ வைரஸ் நிவாரண தொகை ரூ.1000ஃ-ம் மற்றும் ஏப்ரல் மாதத்திற்கான ரேசன் பொருட்கள் வழங்கும் பணிகளை ஆய்வு செய்து, பொது மக்கள் சமூக இடைவெளி பின்பற்ற வேண்டும் என தெரிவித்து, இதனை அலுவலர்கள் கண்காணிக்க உத்தரவிட்டார்.

அதனை தொடர்ந்து, ஆழ்வார்திருநகரி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கேம்பலாபாத், இரண்டாவது கீழ பிளாக் பகுதியில் கொரானோ தொற்று நோய் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நபர்களின் வீடு அமைந்துள்ள பகுதிகளில் 100 சதவீதம் கிருமி நாசினி அளிக்கும் பகுதிகளை முழுமையாக மேற்கொள்ள வேண்டும் எனவும், இதன் சுற்றியுள்ள பகுதிகளிலும் கிருமி நாசினி தெளிக்கும் பணிகள் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் எனவும் அலுவலர்களுக்கு அறிவுரைகளை வழங்கினார். மேலும், அந்த வீட்டில் உள்ள நபர்களுக்கு தன்னார்வலர்கள் மூலம் கொரானோ வைரஸ் நிவாரண தொகை ரூ.1000-ம் மற்றும் ஏப்ரல் மாதத்திற்கான ரேசன் பொருட்கள் வழங்க உத்தரவிட்டார்.

பின்னர், மாவட்ட ஆட்சியர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:-தூத்துக்குடி மாவட்டத்தில் கொரானோ வைரஸ் நோய் பரவாமல் தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதுவரை நமது மாவட்டத்தில் 3 நபர்களுக்கு கொரானோ வைரஸ் நோய் உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், வெளிநாட்டில் இருந்து வருகைத்தந்த நபர்களின் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு அவர்களின் உடல் நலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

கொரானோ தொற்று ஏற்பட்டுள்ள நபர்களின் வீடு அமைந்துள்ள பகுதிகள் மற்றும் அதன் சுற்றியுள்ள சுமார் 8 கிலோ மீட்டர் பகுதிகளில் உள்ள பொது மக்களின் உடல் நலம் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. மேலும், இந்த நோயினால் பாதிக்கப்பட்ட நபரின் மூலம் நேரடி தொடர்பு உள்ள நபர்களின் உடல் நலன் குறித்து சுகாதாரத்துறையின் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. பொது மக்கள் அரசு மேற்கொள்ளப்படும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என தெரிவித்தார்.

இந்த ஆய்வின் போது, திருச்செந்தூர் வருவாய் கோட்டாட்சியர் தனப்பிரியா, காயல்பட்டிணம் நகராட்சி ஆணையர்.புஸ்பலதா, துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் மரு.கிருஷ்ணலிலா, வட்டாட்சியர்கள் அற்புதமணி (ஏரல்), ஞானராஜ் (திருச்செந்தூர்), திருச்செந்தூர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) வட்டாட்சியர் பொன்னு லெட்சுமி, திருச்செந்தூர் துணை காவல் கண்காணிப்பாளர் பரத், ஆத்தூர் பேருராட்சி செயல் அலுவலர் ரங்கசாமி மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.