தூத்துக்குடி அமெரிக்கன் ஆஸ்பத்திரியில் கொரானா வார்டு – ஆட்சியர் ஆய்வு!!

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் அமைந்துள்ள அமெரிக்கன்
மருத்துவமனையில் கொரோனா வார்டு அமைப்பதற்கு ஏற்படுத்தபட்டுள்ள வசதிகளையும், கூடுதலாக படுக்கை வசதிகள் ஏற்படுத்துவது தொடர்பாகவும் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மேலும், தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட நந்தகோபாலபுரம் நோய் கட்டுபாட்டு பகுதியில் மாநகராட்சி பணியாளர்கள் மேற்கொள்ளப்பட்டு வரும் கிருமி நாசினி தெளிக்கும் பணிகள் மற்றும் வீடு வீடாக சென்று தெர்மல் ஸ்கிரினங் மற்றும் பல்சஸ் பரிசோதனை பணிகளை ஆய்வு செய்து நோய் கட்டுபாட்டு பகுதியில் உள்ள அனைத்து வீடுகளிலும் மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்ள அறிவுறுத்தினார்.

பின்னர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்தாவது:

“தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை 33,400 நபர்களுக்கு கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே 923 நபர்கள் பூரணம் குணம் பெற்று வீடு திரும்பி உள்ளார்கள். தற்போது 627 நபர்கள் சிகிச்சை பெற்று
வருகிறார்கள்.

மாநகராட்சி, நகராட்சி பகுதிகளில் சளி, காய்ச்சல், இரும்பல் போன்ற அறிகுறிகள் உள்ள 2 அல்லது 3 நபர்கள் ஒரே பகுதியில் கண்டறியப்பட்டால் உடனடியாக மருத்துவ குழுவினர் அப்பகுதிக்கு சென்று சுழற்சி முறையில் பல்வேறு நபர்களின் மாதிரிகள் சேகரிக்கப்படுகிறது.

கடந்த 3 நாட்களான திரேஸ்புரம் பகுதியில் 200 மாதிரிகள் சேகரிக்கப்பட்டது. இதில் 40 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மேலும் அந்த பகுதி நோய் கட்டுபாட்டு பகுதியாக அறிவிக்கப்பட்டு கிருமி நாசினி மற்றும் மருத்தவ பரிசோதனை பணிகள் மாநகராட்சி மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதேபோல் விளாத்திகுளம் காய்கறி மார்கெட் பகுதியில் கொரோனா தொற்று அறிகுறி இருந்தால் அப்பகுதியில் மார்கெட்டில் பணிபுரியும் 137 நபர்களுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொண்டதில் கிட்டதட்ட 40 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

மேலும் அவர்களுடன் தொடர்பில் உள்ள நபர்களையும் கண்டறியப்பட்டு மாதிரிகள் சேகரிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா தொற்று நோயினால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு ஏதுவாக கூடுதலாக படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

அதிகமாக பாதிப்புக்கு உள்ளாகிய நபர்களை தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. அதற்காக 600 படுக்கைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

லேசான அறிகுறி உள்ள நபர்களை தாலுக்கா மருத்துவமனையில் (Covid Hospital) அனுமதிக்கப்பட்டு அவர்களுக்கு தேவையான சிகிச்சை அளிக்கப்படுகிறது. மேலும் கொரோனா அறிகுறி இல்லாத நபர்களை தூத்துக்குடி தொழில்நுட்ப கல்லூரி, கோவில்பட்டி நேஷனல் பொறியல் கல்லூரி, எட்டயபுரத்தில் ஒரு கல்லூரியும், திருச்செந்தூர் சிவந்தி ஆதித்தனார் கல்லூாயில் 200 படுக்கைகள் உள்ளிட்ட இடங்களில் அனுமதிக்கப்பட்டு கோவிட் கேர் செண்டராக செயல்பட உள்ளது.

இந்த கோவிட் கேர் செண்டரில் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் மருத்துவர்கள், செவிலியர்கள் பணியாற்றுவார்கள். அங்கு அனுமதிக்கப்பட்ட நபர்களுக்கு தேவையான உணவு வசதிகளும் வழங்கிட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

மேலும் தனியார் மருத்துவமனையில் கொரோனா தொற்று நோயாளிகளுக்கு கூடுதல் படுக்கைகள் மற்றும் மருத்துவ வசதிகள் ஏற்படுத்துவது தொடர்பாக இன்று தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் அமைந்தள்ள அமெரிக்கன் மருத்துவமனையில் ஆய்வு செய்யப்பட்டது.

கோவிட் கேர் செண்டரில் 600 படுக்கைகள் தற்போது தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் 1,000 படுக்கைகளாக உயர்த்திட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

நமது மாவட்டத்தில் 10 நாட்களாக சிகிச்சை பெற்று பூரணம் குணம் பெற்று வீடு திரும்பும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. பொதுமக்கள் அவசிய வேலைக்கு வெளியே வரும்போது கட்டாயமாக முககவசங்களை அணிந்து சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் எனவும், மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ளும் கொரோனா தடுப்பு பணிகளுக்கு பொது மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என தெரிவித்தார்.

ஆய்வின் போது மாநகராட்சி ஆணையர் ஜெயசீலன், திருச்செந்தூர் கோட்டாட்சியர் தன மாநகராட்சி நகர்நல அலுவலர் அருண்குமார், ஏரல் வட்டாட்சியர் அற்புதமணி, மாநகராட்சி சுகாதார அலுவலர் ஹரிகணேஷ், அமெரிக்கன் மருத்துவமனை நிர்வாகி லீஸ் ஜாண் மற்றும் அலுவலர்கள் உள்பட பலர் உடனிருந்தனர்.