கொரோனா வைரஸ் பரிசோதனை செய்யும் மையங்கள்: தூத்துக்குடி மாநகராட்சி அறிவிப்பு

தூத்துக்குடியில் கொரோனா வைரஸ் பரிசோதனை செய்யும் மையங்கள் எவை என்பது குறித்து தூத்துக்குடி மாநகராட்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இது குறித்து தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவித்துள்ளதாவது…

தமிழக அரசின் வழிகாட்டுதலின்படி கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக கொரோனா வைரஸ் பரவலை தடுக்க பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் தூத்துக்குடி மாநகராட்சி மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுவரை தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் அமைந்துள்ள நகர்புற ஆரம்ப சுகாதார மையங்கள் மூலமாக 1388 மாதிரிகளும் நடமாடும் பரிசோதனை வாகனம் மூலம் 4375 மாதிரிகள் ஆக மொத்தம் இதுவரை 5763 சளி மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. பரிசோதனையின் மூலம் நோய் தொற்று உள்ளவர்கள் கண்டறியப்பட்டு தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் மூலம் சிறப்பான சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில் நோய் பரவலை வெகுவாக கட்டுப்படுத்தும் பொருட்டு நோய் தொற்று அறிகுறிகள் குறித்து சந்தேகிக்கப்படும் ஆரம்பக்கட்டத்தில் உள்ள நபர்களுக்கு கூடுதல் மாதிரிகள் எடுப்பதன் மூலம் மேற்கொண்டு நோய் பரவலை தடுக்க முடியும் என்பதை கருத்தில் கொண்டு தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் அமைந்துள்ள ஆறு நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் சிறப்பு காய்ச்சல் முகாம் நடத்தவும், கரோனா வைரஸ் காய்ச்சல் நோய் எதிர்ப்பு சக்தி உருவாக்கும் கூட்டு மருந்துகள் தூத்துக்குடி மாநகராட்சி மூலம் ஒன்றிணைத்து பொதுமக்களுக்கு தேவைக்கு ஏற்ப வழங்கவும் திட்டமிடப்பட்டு இன்று (01.07.2020) மாவட்ட ஆட்சியர் தலைமையில், மாநகராட்சி ஆணையர் (ம) தனி அலுவலர் முன்னிலையில் செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜு துவக்கி வைத்தார்.

கீழ்க்கண்ட அட்டவணையின்படி பொதுமக்கள் யாருக்கேனும் காய்ச்சல், சளி, இருமல், மூச்சுத்திணறல் போன்ற அறிகுறிகள் இருப்பின் அந்தந்த பகுதி நகர்புற ஆரம்ப சுகாதார மையங்களுக்கு சென்று கரோனா காய்ச்சல் பரிசோதனை செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நகர்புற ஆரம்ப சுகாதார நிலையம் வார்டு எண்
தருவை ரோடு (ஸ்டேட் பேங்க் காலனி) 1,2,4,6,7,8,9,37,38.39
லூர்தம்மாள்புரம் 5,10,11,17,18,21
திரேஸ்புரம் (குருஸ்புரம்) 12 முதல் 16, 19,20,22 முதல் 33,45
முள்ளக்காடு 51 முதல் 60
கணேஷ்நகர் 40,42,43,44,46,47,48,49,50
பி & டி காலனி 3,34,35,36,41

மேலும் தேவைக்கேற்ப நடமாடும் பரிசோதனை வாகனங்களை கூடுதலாக இயக்க உத்தேசிக்கப பட்டுள்ளது’’ இவ்வாறு மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.