கரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவியதால் நாடு முழுவதும் கடந்த 22 நாட்களாக ஊரடங்கு அமலில் இருந்த நிலையில் தொடர்ந்து வருகிற 3-ந் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது. கரோனா வைரஸ் பரவுவதை தடுக்க தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தூத்துக்குடி மாவட்டத்தில் மொத்தம் 26 பேர் கரோனா வைரசால் பாதிக்கப்பட்டனர். இதில் ஒரு மூதாட்டி இறந்து உள்ளார். 2 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். மீதமுள்ள 23 பேரும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில் கரோனா பாதித்தவர்களுடன் தொடர்பில் இருந்த அனைவரது விவரங்களையும் அதிகாரிகள் சேகரிப்பதற்காக வட்டம், குறுவட்டம் அளவிலும் தனித்தனியாக அதிகாரிகள் குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவினர் கரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் யாருடன் நெருங்கி பழகி உள்ளனரோ அவர்களையும், பாதிக்கப்பட்டவர்களின் தெருக்களையும் சுற்றிய 5 மீட்டர் தூரத்தை முற்றிலும் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணித்து வருகின்றனர்.
மேலும் அரசின் உத்தரவின்படி வீடு, வீடாக சென்று சளி மாதிரியை பரிசோதனைக்காக சேகரித்தனர். போல்டன்புரம் பகுதியில் நேற்று வரை 158 பேருக்கு மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டன. இந்த மாதிரிகள் அனைத்தும் பரிசோதனை முடிக்கப்பட்டு, கரோனா பாதிப்பு இல்லை என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 2 நாட்களாக தூத்துக்குடி மாவட்டத்தில் யாருக்கும் புதிதாக கரோனா நோய் தொற்று ஏற்படவில்லை என்பதால் பொதுமக்கள் சற்று ஆறுதல் அடைந்துள்ளனர்.