6 போலீசாருக்கு கரோனா : காவல் நிலையம் மூடல்

தூத்துக்குடி மாவட்டம், உடன்குடியில் உள்ள ஒரு தேசிய மயமாக்கப்பட்ட வங்கி கிளையில் பணிபுரியும் 3 ஊழியர்களுக்கு கடந்த 2 நாட்களுக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. இதையடுத்து அந்த வங்கி மூடப்பட்டது. தற்போது அந்த வங்கியில் பணிபுரியும் மேலும் 2 ஊழியர்களுக்கும், உறவினர் ஒருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

குலசேகரன்பட்டினம் காவல் நிலையத்தில் பணியாற்றும் 6 போலீசார் கரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதையடுத்து குலசேகரன்பட்டினம் காவல் நிலையம் மூடப்பட்டது. வட்டார மருத்துவ அலுவலர் ஆனிபிரிமின் தலைமையில் காவல் நிலையம், காவல் நிலைய குடியிருப்பு உள்ளிட்ட பகுதிகளில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. மேலும் காவலர் குடியிருப்பில் உள்ள போலீசார், குடும்பத்தினருக்கு கரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. பரமன்குறிச்சியில் கர்ப்பிணி உள்பட 2 பேருக்கும், சியோன்நகர், ராமநாதபுரம், வாகைவிளை ஆகிய பகுதிகளில் தலா ஒருவருக்கும் கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது.

எட்டயபுரம் தாலுகாவில் உள்ள ஈராச்சி, சிந்தலக்கரை, முத்துலாபுரம், சோழபுரம், கடலையூர் ஆகிய கிராமங்களை சேர்ந்த 6 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். மேலும் எட்டயபுரம் கான்சாபுரம் பகுதியை சேர்ந்த 27 வயது பெண், எட்டயபுரம் நடுவிற்பட்டியை சேர்ந்த 49 வயது ஆட்டோ டிரைவர், எட்டயபுரத்தை சேர்ந்த 53 வயது பெண் ஆகியோருக்கும் தொற்று உறுதியாகி உள்ளது. இவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் உள்ள கரோனா சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டனர். இதையடுத்து எட்டயபுரம் பேரூராட்சி சுகாதார ஆய்வாளர் வெற்றி வேல்முருகன் மற்றும் சுகாதார பணியாளர்கள், அதிகாரிகள், அங்கு சென்று கிருமி நாசினி தெளித்தல் உள்ளிட்ட சுகாதார பணிகள் மேற்கொண்டனர்.

நர்சுக்கு கரோனா:

சாத்தான்குளத்தில் நர்சு உள்பட 3 பேருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. அவர்கள் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் வசித்த பகுதியில் சுகாதாரத்துறையினர் கிருமி நாசினி தெளித்தனர்.

ஆத்தூர் பகுதியில் தனியார் தொழிற்சாலையில் வேலை பார்த்த தொழிலாளி, அவரது மகன், தாயார் ஆகியோருக்கும், அதே தொழிற்சாலையில் பணியாற்றும் ஆத்தூர் பழைய கிராமத்தை சேர்ந்த 2 தொழிலாளர்களுக்கும் கரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. சேர்ந்தபூமங்கலத்தை சேர்ந்த விவசாயிகள் 2 பேர், தலைவன்வடலியைச் சேர்ந்த ஒருவர், தெற்கு ஆத்தூரைச் சேர்ந்த ஒருவருக்கு கரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது. இதேபோல் ஆறுமுகநேரியில் கரோனாவால் பாதிக்கப்பட்ட தொழிலாளியின் மனைவி, மகன், மகளுக்கும் தொற்று ஏற்பட்டு உள்ளது. இதனால் அந்த பகுதியில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு சுகாதாரப்பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

Credits: Chendur Times