தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்த மேலும் இருவர் குணமடைந்து வீடு திரும்பினர்.

தூத்துக்குடி மாவட்த்தில் கரோனா வைரஸ் தொற்று நோயினால் 27 நபர்கள் பாதிக்கப்பட்டு அதில் 22 நபர்கள் தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையிலும், 5 நபர்கள் திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வந்தனர். ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 22 பேர் சிகிச்சை முடிந்து குணமடைந்து வீடு திரும்பினர்.

இந்நிலையில் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் கரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்த மேலும் இருவர் குணமடைந்து வீடு திரும்பினர். குணமடைந்தவர்களை  மருத்துவமனை முதல்வர் திருவாசகமணி மற்றும் மருத்துவர்கள், பழங்கள் வழங்கி வாழ்த்தி வீடுகளுக்கு அனுப்பி வைத்தனர்.  தொடர்ந்து 14 நாட்கள் மருத்துவ கண்காணிப்பில் இருப்பார்கள்.  தற்போது தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ஒருவரும், திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ஒருவரும் என இன்னும் 2 நபர்கள் மட்டும் கரோனா வைரஸ் தொற்று நோயினால் பாதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். 

கடந்த ஒரு வாரமாக புதிதாக யாருக்கும் கரோனா தொற்று ஏற்படவில்லை. தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக நடந்து வருகிறது. மேலும் தூத்துக்குடி மாவட்டத்தில் அதிகம் பாதிக்கப்பட்ட மாநகராட்சி பகுதியில் கடந்த 12-ம் தேதிக்கு பிறகு எந்தவித கரோனா தொற்றும் ஏற்படவில்லை. இதனால் தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா வைரசின் தாக்கம் குறையத் தொடங்கி உள்ளது. சிவப்பு மண்டலத்தில் உள்ள தூத்துக்குடி மாவட்டம் மெல்ல, மெல்ல ஆரஞ்சு மண்டலத்தை நோக்கி நகரத் தொடங்கி உள்ளது.