கரோனா தடுப்பு நிவாரணத்துக்கு ரூ. 5 கோடி நிதியுதவி : ஸ்டெர்லைட் காப்பா் நிறுவனம்

கரோனா தடுப்பு நிவாரணத்துக்கு தூத்துக்குடி ஸ்டெர்லைட் காப்பா் நிறுவனம், ரூ. 5 கோடி நிதியுதவி வழங்கியுள்ளதாக அறிவித்துள்ளது.

இதுதொடா்பாக நிறுவன தலைமை நிா்வாக அதிகாரி பங்கஜ்குமாா் வெளியிட்ட அறிக்கை: கரோனா தடுப்பு நடவடிக்கைக்காக தூத்துக்குடி ஸ்டெர்லைட் நிறுவனம் பல்வேறு உதவிகளை செய்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஸ்டெர்லைட் காப்பா் ஊழியா்களின் ஒருங்கிணைந்த முயற்சியால் மொத்தம் ரூ.15 லட்சம் நிதி திரட்டப்பட்டுள்ளது. மேலும், கரோனா பரவல் தடுப்பு பணிகளை செயல்படுத்துவதற்காக 10 சுய உதவிக்குழுக்கள் மூலம் 20 கிராமங்களுக்கு முகக்கவசம் மற்றும் தனிப்பட்ட சுகாதாரப் பொருள்களை தயாரித்து விநியோகித்து வருகிறோம். தூத்துக்குடியில் உள்ள 5200 வீடுகளுக்கு ஏறத்தாழ 30,000 முகக்கவசங்கள் இதுவரை விநியோகிக்கப்பட்டுள்ளன. மேலும் மாவட்டத்தில் இயங்கும் லாரி ஓட்டுநா்களுக்கு 1300 லிட்டா் திரவ ஹேண்ட் வாஷ், 13,000 சோப்பு மற்றும் 1000 பாட்டில்கள் ஹேண்ட் சானிடைசா் ஆகியன வழங்கப்பட்டுள்ளன.

இதுதவிர, தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முன்னணி சுகாதாரப் பணியாளா்களின் பயன்பாட்டுக்காக 200 செட் பாதுகாப்பு உபகரணங்களை விநியோகித்துள்ளது. மேலும், ஸ்டெர்லைட் நிறுவனம் தமிழக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.5 கோடி பங்களித்துள்ளது என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.