கரோனா தொற்று நோய் தடுப்பு பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு

தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரி ஊராட்சி ஒன்றியம் மழவைராயநத்தம் ஊராட்சி தனிமைபடுத்தபட்ட பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் கரோனா தொற்று நோய் தடுப்பு பணிகளை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, இன்று (11.05.2020) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும், நோய் கட்டுபாட்டு தடுப்பு பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு தன்னார்வலர்கள் மூலம் ரேசன் பொருட்களை வழங்க வேண்டும் எனவும், கிருமி நாசினி தெளிக்கும் பணிகளை தீவிரப்படுத்திட வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுரைகளை வழங்கினார். மேலும், தூய்மை பணியாளர்கள் தூய்மை பணியில் ஈடுபடும்போது தினம்தோறும் புதிய முகமூடிகளை அணிந்து பணியாற்றுவதை அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும். தனிமைபடுத்தபட்ட பகுதியில் உள்ள பொதுமக்கள் வெளியில் வராமல் சமூக விலகளுடன் இருக்க விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டும் என தெரிவித்தார்.

பின்னர் ஆட்சியர், தெரிவித்தாவது: தமிழ்நாடு முதலமைச்சர் தமிழகத்தில் மே மற்றும் ஜூன் மாதத்துக்கான ரேசன் பொருட்கள் விலையில்லாமல் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் என அறிவித்து இருந்தார்கள். அதனடிப்படையில் நமது மாவட்டத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லாமல் ரேசன் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. குறிப்பாக தனிமைபடுத்தபட்ட நபர்களுக்கு தன்னார்வலர்கள் மூலம் ரேசன் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.
மேலும் தனிமைபடுத்தபட்ட நபர்கள் வீட்டில் இருந்து வெளியே வருவதை தவிர்க்க வேண்டும் எனவும், கரோனா வைரஸ் தொற்று நோய் குறித்து இடையே தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இன்று ஆழ்வார்திருநகரி ஊராட்சி ஒன்றியம் மழவைராயநத்தம் ஊராட்சி தனிமைபடுத்தப்பட்ட பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் கரோனா தொற்று நோய் தடுப்பு பணிகள் ஆய்வு செய்யப்பட்டது. மேலும் வெளி மாவட்டம், வெளி மாநிலத்தில் இருந்து நமது மாவட்டத்திற்கு வருகை தரும் நபர்களை கண்டறிய சோதனை சாவடிகள் அமைக்கபட்டு கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தபட்டுள்ளது. தனிமைபடுத்தப்பட்டு நபர்கள் ஒருபோதும் தங்களது வீட்டில் இருந்து வெளியே வராமல் இருக்க வேண்டும். நமது மாவட்டத்தில் கரோனா வைரஸ் கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகள் மேற்கொண்டு வந்தாலும் அரசு தெரிவித்துள்ள வழிமுறைகளை பொதுமக்கள் முழுமையாக பின்பற்றி மாவட்ட நிர்வாகத்திற்க ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என தெரிவித்தார்.
அதனைத்தொடர்ந்து ஆழ்வார்திருநகரி ஊராட்சி ஒன்றியம் ஆதிநாதபுரம் ஊராட்சி பகுதியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்பு உறுதி திட்டத்தின்கீழ் பணிகள் நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் பணியாளர்களின் வருகை பட்டியல் மற்றும் பதிவுகளை பார்வையிட்டு, பணியில் ஈடுபடும்போது சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும் எனவும், தினம்தோறும் முககவசங்களை மாற்றி புதிதாக அணிந்து பணியாற்ற பணியாளர்களுக்கு அறிவுறுத்தினார்.

ஆய்வின்போது திருச்செந்தூர் வருவாய் கோட்டாட்சியர் செல்வி.தனப்ரியா, ஏரல் வட்டாட்சியர்கள் அற்புதமணி, முத்துராமன் (சமூக பாதுகாப்பு திட்டம்), ஆழ்வார்திருநகரி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாக்கியலிலா, கருப்பசாமி, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் நைனார் மற்றும் அலுவலர்கள் உட்பட பலர் உள்ளனர்.