கரோனா தொற்று நோய் தடுப்பு பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியம் பாண்டவர்மங்களம் ஊராட்சிக்கு உட்பட்ட ராஜிவ்நகர் மற்றும் இளம்புவனம் தனிமைபடுத்தபட்ட பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் கரோனா தொற்று நோய் தடுப்பு பணிகளை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, இன்று (12.05.2020) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் வ.உ.சி. பள்ளி மைதானத்தில் தற்காலிகமாக செயல்பட்டு வரும் காய்கறி சந்தை பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்து, காய்கறிகள் விற்பனை செய்யும் வியாபாரிகள் சமூக இடைவெளியை கடைபிடிக்குமாறும், காய்கறிகளை வாங்கி கொண்டு இருந்த பொதுமக்களையும் சமூக இடைவெளியை பின்பற்ற அறிவுறுத்தினார்.

மேலும், கோவில்பட்டி பகுதியில் உள்ள கனரா வங்கிக்கு அதிகமான பொதுமக்கள் வங்கி சேவைக்காக வருகை தந்திருந்தார்கள். பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று கொண்டு இருந்ததை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு, வங்கி மேலாளரிடம் பொதுமக்கள் அமர்வதற்கு ஏதுவாக நாற்காலிகள் பயன்படுத்த வேண்டும் எனவும், வங்கிகளுக்கு வரும் பொதுமக்கள் கட்டாயமாக முககவசங்களை அணிந்து வரவும், வங்கி நுழைவு பகுதியில் சாணிடைசர் வைத்து இருக்க வேண்டும் எனவும், வங்கியில் பணியாற்றும் அனைத்து பணியாளர்களும், வங்கிக்கு வரும் பொதுமக்களும் முககவசங்கள் மற்றும் சமூக இடைவெளியை கடைபிடிப்பதை வங்கி மேலாளர் உறுதி செய்திட வேண்டும் என அறிவுறுத்தினார்.

பின்னர் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, தெரிவித்தாவது: தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா வைரஸ் பரவாமல் தடுக்க தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக தனிமைபடுத்தபட்ட பகுதியில் இருந்து பொதுமக்கள் வெளியே வருவதை தவிர்க்க வேண்டும். மேலும் அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி கிடைக்க மாவட்ட நிர்வாகத்தின் மூலம் தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இன்று கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியம் பாண்டவர்மங்களம் ஊராட்சிக்கு உட்பட்ட ராஜிவ்நகர் மற்றும் இளம்புவனம் தனிமைபடுத்தபட்ட பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் கரோனா தொற்று நோய் தடுப்பு பணிகள் நேரில் ஆய்வு செய்யப்பட்டது. ராஜிவ்நகர் பகுதியில் 778 வீடுகளில் 2636 மக்களும், இளம்புவனம் பகுதியில் 630 வீடுகளில் 2306 மக்களும் தனிமைபடுத்தப்பட்டுள்ளார்கள். மேலும் தனிமைபடுத்தபட்ட நபர்களுக்கு தன்னார்வலர்கள் மூலம் ரேசன் பொருட்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

நோய் கட்டுப்பாட்டு தடுப்பு பகுதியில் இருந்து பொதுமக்கள் வெளியில் வருவதை தவிர்பதற்காகவும், கரோனா வைரஸ் தொற்று நோய் பரவால் இருப்பதற்காகவும், நடமாடும் காய்கறி அங்காடி வாகனம் மூலம் காய்கறி வாங்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் இந்த பகுதிகளில் கிருமி நாசினி தெளிக்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டத்தின் கீழ் இந்த பகுதியில் பணிகளை மேற்கொள்ள வேண்டாம் எனவும் பணியாளர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. கரோனா வைரஸ் தொற்று நோய் பரவாமல் இருக்க பொதுமக்கள் சமூக இடைவெளியை பின்பற்றுவதுடன் அடிக்கடி கை கழுவ முறைகளை கடைபிடிக்க வேண்டும். சுய ஊரடங்கு உத்தரவினை முழுமையாக கடைபிடித்து அரசு தெரிவிக்கும் வழிமுறைகளை பின்பற்றி கரோனா வைரஸ் தொற்று நோய் பரவாமல் கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என தெரிவித்தார்.

ஆய்வின்போது கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர் விஜயா, சுகாதார பணிகள் துணை இயக்குநர் கோவில்பட்டி மரு.அனிதா, வட்டாட்சியர்கள் மணிகண்டன் (கோவில்பட்டி), அழகர் (எட்டயபுரம்), கோவில்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மாணிக்கவாசகம், வசந்தா, கோவில்பட்டி ஒன்றியக்குழு தலைவர் கஸ்தூரி சுப்புராஜ், பாண்டவர்மங்களம் ஊராட்சி தலைவர் கவிதா அன்புராஜ், துணைத்தலைவர் ராஜலட்சமி, இளம்புவனம் ஊராட்சி தலைவர் முத்து மற்றும் அலுவலர்கள், மருத்துவர்கள் உட்பட பலர் உள்ளனர்