சோதனை சாவடியில் பந்தல் அமைக்கப்பட்டு குடிநீர் வசதி :

கரோனா வைரஸ் தடுப்பு பணியையொட்டி சாத்தான்குளம், தட்டார்மடம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் சோதனை சாவடி அமைக்கப்பட்டு வெளிமாவட்ட பகுதியில் இருந்து வரும் வாகனங்கள் மற்றும் பொதுமக்களை போலீஸார் கண்காணித்து வருகின்றனர். இதில் அனைத்து சோதனை சாவடிகளிலும் சோதனை மேற்கொள்ள போலீசாருக்கு எந்தவித வசதிகளும் செய்து கொடுக்கப்படாமல் இருந்தது.

தற்போது கத்திரி வெயில் தொடங்கியுள்ளதால் சோதனை சாவடிகளிலும் சோதனை மேற்கொள்ளும் போலீசார் மிகவும் சிரமம் அடைந்தனர். இந்நிலையில் பொதுமக்கள் வலியுறுத்தலின் பேரில் சாத்தான்குளம் அருகே உள்ள செங்குளம் விலக்கு சோதனை சாவடியில் பணியில் இருக்கும் போலீசாருக்கு உதவிடும் வகையில் சோதனை சாவடியில் பந்தல் அமைக்கப்பட்டு குடிநீர் வசதி  உள்ளிட்ட வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன.

இதனையடுத்து சோதனை சாவடியில் உற்சாகத்துடன் போலீசார் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனை  பொதுமக்கள், வாகன ஓட்டிகள் வரவேற்று பாராட்டு தெரிவித்துள்ளனர்.  வெளி பகுதியில் இருந்து இப்பகுதிக்கு வருபவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும், வாகன ஓட்டிகள் சமூக இடைவெளியை கடைபிடித்து கரோனா தொற்று பரவுவதை தடுக்க முன் உதாரணமாக திகழ வேண்டும் என போலீசார்  தெரிவித்துள்ளனர்