தூத்துக்குடிக்கு வந்த 34 இளைஞர்கள் தனிமை

தூத்துக்குடிக்கு வந்த மகராஷ்டிரா மாநிலம் யவாத்மால் மாவட்டத்தில் பணியாற்றிய 34 இளைஞர்கள் தூத்துக்குடி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள தனிமை முகாமில் தங்க வைக்கப்பட்டனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் சாத்தான்குளம், திருச்செந்தூர், கோவில்பட்டி, குளத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த 34 இளைஞர்கள் மகராஷ்டிரா மாநிலத்தின் யவாத்மால் மாவட்டத்தில் உள்ள நிறுவனங்களில் பணியாற்றி வந்தனர். தேசிய ஊரடங்கால் வேலை இழந்து தவித்த இந்த இளைஞர்கள் தனியார் பேருந்து மூலம் சேலம் வந்தனர். பின்னர் அவர்கள் அனைவரையும் அரசு பேருந்தில் தூத்துக்குடிக்கு அழைத்து வரப்பட்டு உடனடியாக தூத்துக்குடி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள தனிமை முகாமில் தங்க வைக்கப்பட்டனர்.

மகராஷ்டிராவின் யவாத்மால் மாவட்டம் சிவப்பு மண்டலமாக இருப்பதால், இளைஞர்கள் அனைவருக்கும் கரோனா மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. இந்த பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் அவர்கள் முகாமிலேயே தங்க வைக்கப்படுவார்களா அல்லது வீடுகளுக்கு அனுப்பப்பட்டு, அங்கே தனிமைப்படுத்தப்படுவார்களா என்பது முடிவு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.