தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் ரூ.60 லட்சம் மதிப்பிலான கரோனா பரிசோதனை ஆய்வகம்- அமைச்சர் கடம்பூர் செ. ராஜூ தகவல்

எட்டயபுரத்தில் போலீஸார் தாக்கியதால் தற்கொலை செய்து கொண்ட கணேசமூர்த்தியின் வீட்டுக்கு நேற்று காலை அமைச்சர் கடம்பூர் ராஜூ சென்றார். அங்கு கணேசமூர்த்தியின் மனைவி ராமலட்சுமி மற்றும் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். மேலும், ராமலட்சுமிக்கு அரசு வேலை கிடைப்பதற்கான பணிகளை விரைந்து முடிக்க வருவாய்த்துறை அதிகாரிகளை செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார். அவருடன் சட்டப்பேரவை உறுப்பினர் பி.சின்னப்பன், காவல் துணை கண்காணிப்பாளர் பீர் முகைதீன், ஆய்வாளர் கலா மற்றும் அதிகாரிகள், அதிமுகவினர் உடனிருந்தனர்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, கரோனா எவ்வளவு வேகமாக பரவுகிறதோ அதனை விட வேகமாக அரசு நடவடிக்கை எடுத்து தடுக்கின்ற பணிகளில் ஈடுபட்டு வருகிறது. கரோனாவால் பாதிக்கப்படுகிறவர்களை விட குணமடைந்து திரும்புவோர் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் வகையில் மின்னல் வேகத்தில் அரசு செயல்பட்டு வருகிறது.

ஈரான் நாட்டில் மீன் பிடி தொழில் செய்து வரும் தமிழக மீனவர்கள் இந்திய கப்பற்படைக்கு சொந்தமான கப்பலில் தூத்துக்குடி துறைமுகத்துக்கு வர உள்ளனர். அவர்களை பரிசோதித்து அவர்களது சொந்த ஊர்களுக்கு செல்ல தேவையான பணிகளை மாவட்ட நிர்வாகம் செய்து வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் ரூ.60 லட்சம் மதிப்பிலான கரோனா பரிசோதனை ஆய்வகம் ஓரிரு நாட்களில் தொடங்கப்பட உள்ளது என்றார்.