”கொரோனா” தாக்கம் நீங்கிடவேண்டி ஸ்ரீசித்தர்-யின் நெருப்பு வளையத்திற்குள் மஹா காளி யாகம்..!

நாடு முழுவதும் ”கொரோனா” தாக்கம் நீங்கிடவேண்டி ”ஸ்ரீசித்தர்” நெருப்பு வளையத்திற்குள் மஹா காளி யாகம்..!

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தாக்கம் முற்றிலுமாக நீங்கிடவேண்டி ஸ்ரீசித்தர் நெருப்பு வளையத்திற்குள் அமர்ந்து ”மஹா காளி யாகம்” வழிபாடு செய்தார்.

உலகம் முழுவதும் பரவி வருவதுடன், உலக மக்களை தொடர்ந்து அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தாக்கத்தால் அனைத்து மக்களும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸ் பரவலை தடுத்திட நாடு முழுவதும் கடந்த மார்ச் 24ம் தேதி முதல் வரும் 17ம் தேதி வரையிலும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், கொரோனா வைரஸ் பரவல் முற்றிலுமாக நீங்கி அனைத்து மக்களும் அச்சமின்றி, மன தைரியம் பெற்று நலமாக வாழ்ந்திடவேண்டி தூத்துக்குடி கோரம்பள்ளம் அய்யனடைப்பு ஸ்ரீசித்தர் நகரிலுள்ள ஸ்ரீமஹா பிரத்தியங்கிராதேவி-மஹா காலபைரவர் சித்தர் பீடத்தின் சுவாமிகள் ”சாக்தஸ்ரீ” சற்குரு சீனிவாச சித்தர் தலைமையில் கடந்த மூன்று மாத காலமாக தொடர்ந்து சிறப்பு யாக வேள்வி வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகிறது.

அரசின் அறிவுறுத்தல்படி பக்தர்கள் யாரும் இல்லாமல் ஸ்ரீ சித்தர் பீடத்தின் ”சாக்தஸ்ரீ” சற்குரு சீனிவாச சித்தர் தலைமையில் சிறப்பு யாகத்துடன் மஹா வேள்வி வழிபாடுகள் வாரம்தோறும் நடைபெற்று வருகிறது.

இதன்படி, உலக மக்களை அச்சுறுத்தி கொரோனா வைரஸ் முற்றிலுமாக நீங்கிடவேண்டி சித்தர்களின் வழிபாட்டு முறையில் ”சாக்தஸ்ரீ” சற்குரு சீனிவாச சித்தர் நெருப்பு வளையத்திற்குள் அமர்ந்து ”மஹா காளி யாகம்” நடத்தி சிறப்பு வழிபாடு செய்தார்.

தகதகவென கொளுந்து விட்டு எரியும் கடுமையான நெருப்பு வளையத்தின் நடுவினிலே அமர்ந்து, உடலை வருத்தி மஹா காளி யாக வழிபாடு நடத்துவதன் மூலமாக வேண்டியபடி நற்பலன்கள் யாவும் கிடைத்திடும் என்பது ஐதீகமாகும்.

இதுகுறித்து, ஸ்ரீசித்தர் பீடத்தின் சுவாமிகள் ”சாக்தஸ்ரீ” சற்குரு சீனிவாச சித்தர் கூறியதாவது, கொரோனா வைரஸ் குறித்து பக்தர்கள் அச்சப்பட தேவையில்லை. மத்திய, மாநில அரசுகளின் அறிவுறுத்தல்படி மக்கள் தேவையில்லாமல் வீடுகளை விட்டு வெளியேறாமல் பாதுகாப்பாக இருந்தாலே இந்த நோய் வராமல் தடுத்திட முடியும்.

இதோடு, மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரும்போது, முககவசம் அணிந்தும், சமூகஇடைவெளியை கடைபிடித்தும் தங்களை தற்காத்து கொள்ளலாம். கொரோனா வைரஸ் வருவதை தடுத்திடும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எமது முன்னோர்களான சித்தர்களின் பாரம்பரிய முறைப்படியான ”கபசுரக் குடிநீர்” பக்தர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

அதோடு, நமது இந்திய திருநாடு மட்டுமின்றி உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தாக்கம் முற்றிலுமாக நீங்கிடவும், அனைத்து மக்களும் நலமாக வாழ்ந்திடவேண்டி தொடர்ந்து ஸ்ரீசித்தர் பீடத்தில் சிறப்பு மஹா யாகவேள்வியுடன் கூடிய சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகிறது என்றார்.