தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதால் மாவட்ட நிர்வாகம் கடலுக்கு செல்ல நடவடிக்கை எடுக்குமாறு திரேஸ்புரம் மீனவர்கள் கோரிக்கை

தூத்துக்குடியில் மீன்பிடி துறை முகம் மறு உத்தரவு வரும் வரை இயங்காது என மீன் வளத்துறை அதிகாரிகள் துறைமுகத்தில் அறிவிப்பு பலகை வைத்துள்ளனர்

தூத்துக்குடி, திரேஸ்புரம் பகுதியில் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. அதில் 26 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து திரேஸ்புரம் பகுதி விசைப்படகுகள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்று உத்தரவிடப்பட்டது. மேலும் அந்த பகுதியில் சுகாதார பணிகள் மேற்கொள்ளும் நடவடிக்கையும் தொடங்கியது.

இந்த நிலையில் அந்த பகுதியில் கூடிய மீனவ மக்கள், ’திடீரென இப்படியொரு உத்தரவை போட்டால் ஏற்கனவே மீன்பிடிக்க ஏற்பாடு செய்திருப்பவை அனைத்தும் வீணாகுமே என்றும் மேலும் மறு உத்தரவு வரும் வரை மீன் பிடித்தல் தொழில் செய்ய கூடாது என அறிவித்தால், அதுவரை எங்களின் வாழ்வாதாரத்திற்கு வழி சொல்லுங்கள்’ என்று கேள்வி எழுப்பினர். மேலும் தொடர்ந்து மீன்பிடிக்க செல்ல அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.