கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வு கூட்டம் : அமைச்சர் கடம்பூர் ராஜு

கரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் வகையில், தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு பஸ் நிலைய சந்தையை அமைச்சர் கடம்பூர் ராஜூ பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அங்கு உள்ள பொதுமக்களிடம் சமூக இடைவெளி விட்டு வரிசையில் நின்று காய்கறிகளை வாங்கி செல்லுமாறு அறிவுறுத்தினார்.

பின்னர் கயத்தாறு நகர பஞ்சாயத்து அலுவலகத்தில், கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வு கூட்டம், அமைச்சர் கடம்பூர் ராஜூ தலைமையில் நடந்தது. அமைச்சர் கடம்பூர் ராஜூ நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்திலும் கரோனா வைரஸ் பரவுதலை கட்டுப்படுத்தும் வகையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமை செயலகத்தில் தினமும் அனைத்து துறை அதிகாரிகளுடனும் ஆலோசனை நடத்தி, தகுந்த ஆலோசனைகளை வழங்கி வருகிறார். கரோனா வைரசை ஒழிக்க, மருத்துவ ரீதியாக ஒரே தீர்வு தனிமைப்படுத்துதல்தான். எனவே நாட்டு மக்களின் நலன் காக்க அனைவரும் சுயஊரடங்கை கடைபிடித்து ஒத்துழைப்பு தர வேண்டும். ஊரடங்கினால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக, தமிழகத்தில் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் தலா ரூ.1,000 உதவித்தொகை வழங்கப்படுவதுடன், ஏப்ரல் மாதத்திற்கான ரேஷன் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. காய்கறி, மளிகை பொருட்கள் போன்றவை தட்டுப்பாடு ஏற்படாத வகையில் விநியோகம் செய்வதற்கு அறிவுறுத்தி வருகிறோம். மேலும் தூத்துக்குடி, கோவில்பட்டி போன்ற நகரங்களில் பொதுமக்கள் கூட்டத்தை தவிர்க்க 2 அல்லது 3 இடங்களில் காய்கறி சந்தைகளை நடத்தி வருகிறோம். அனைத்து அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்களில் கபசுர குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. கயத்தாறு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை தாலுகா மருத்துவமனையாக தரம் உயர்த்த ஏற்பாடு செய்யப்படும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார்.

இந்த கூட்டரங்கில் கோவில்பட்டி டிஎஸ்பி  ஜெபராஜ், கயத்தாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்து, கயத்தாறு தாசில்தார் பாஸ்கரன், நகர பஞ்சாயத்து செயல் அலுவலர் ஜோதிபாசு, யூனியன் ஆணையாளர்கள் சீனிவாசன், சசிகுமார், சுகாதார பணிகள் துணை இயக்குனர் டாக்டர் அனிதா உள்பட பலர் கலந்து கொண்டனர்.