கரோனா விழிப்புணர்வுக்காக முகக்கவசத்துடன் திருமணம் செய்த தம்பதிகள் : தூத்துக்குடி

கரோனா விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மணமக்கள் சங்கர்- சிவசங்கரி, கரோனா விழிப்புணர்வுக்காக முகக்கவசத்துடன் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் வகையில் நேற்று நாடு முழுவதும் மக்கள் சுய ஊரடங்கினை கடைபிடிப்பதை முன்னிட்டு கடைகள், வணிக நிறுவனங்கள் முழுமையாக மூடப்பட்டன. பேருந்து, ரயில், ஆட்டோ, கார், வேன், லாரி, விமான சேவை என அனைத்தும் நிறுத்தப்பட்டன. நேற்று சுபமுகூர்த்த தினம் என்பதால் பலர் திருமண நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்திருந்தனர்.  அனைத்து கோயில்கள், தேவாலயங்கள் மூடப்பட்டதால் பெரும்பாலான மணமக்கள் திருமண மண்டபங்களிலேயே எளிமையாக திருமணங்களை முடித்துக் கொண்டனர். சிலர் சிறிய கோயில்களில் வைத்து எளிமையாக திருமணம் செய்தனர்.

தூத்துக்குடி லெவிஞ்சிபுரம் பகுதியைச் சேர்ந்த சங்கர்- சிவசங்கரி திருமணம் தூத்துக்குடி சிவன் கோயிலில் வைத்து இன்று நடைபெறுவதாக திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் மக்கள் ஊரடங்கு காரணமாக சிவன் கோயில் மூடப்பட்டுள்ளது. இதனால் சங்கர்- சிவசங்கரியின் திருமணம் தூத்துக்குடி முனியசாமிபுரத்தில் உள்ள மாரியம்மன் கோயிலில் வைத்து மிக எளிமையான முறையில் முக்கிய உறவினர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

திருமணத்தின் போது கரோனா வைரஸ் விழிப்புணர்வை வலியுறுத்தும் விதமாக மணமக்கள் இருவரும் முகக்கவசம் அணிந்திருந்தனர். மேலும், கலந்து கொண்ட உறவினர்களும் முகக்கவசம் அணிந்திருந்தனர்.