உலகம் முழுவதும் கொரோனாவால் ஆயிரக்கணக்கான மக்கள் இறந்துள்ளனர். இந்தியாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 979 ஆக உள்ளது. அதில் 85 பேர் குணமடைந்துள்ள நிலையில் 25 பேர் உயிரிழந்துள்ளனர். மற்றவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றார்கள். கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தி வரும் வேளையில் பாதிக்கப்பட்ட எல்லா நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரமாக எடுத்து வருகின்றன. இந்தியாவிலும் ஊரடங்கு உத்தரவு, வீடுகளுக்குச் சென்று கிருமிநாசினி தெளித்தல் என பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் மத்தியப் பிரதேசத்தின் போபாலைச் சேர்ந்த அஷ்ரஃப் அலி என்பவர் போபால் மாநகராட்சிக்கான துப்புரவுப் பொறுப்பாளராக உள்ளார். இவர் போபால் பகுதிக்கு உட்பட்ட வீடுகளுக்கு கிருமிநாசினி தெளிக்கும் பணியில் இருக்கும் போது அவரது தாயார் மறைந்துவிட்ட செய்தி வந்துள்ளது. இருப்பினும் தான் செய்து கொண்டிருந்த பணியை பாதியில் விடாமல் பணி முடிந்த பின்னே தாயாரின் இறுதிச் சடங்கிற்கே சென்றுள்ளார்.

இது குறித்து அவரிடம் விசாரித்தபோது அஷ்ரஃப் அலி, கூறியதாவது :-”ஒருவரின் தாயை விட மதிப்புமிக்கது எதுவுமில்லை. ஆனால் தாய்க்கு அடுத்தது தாய் நாடு. காலை 8 மணியளவில் எனது தாயின் மரணம் குறித்து நான் அறிந்தேன், ஆனால் என் நாட்டிற்கு செய்ய வேண்டிய கடமை இருந்தது. இறுதிச் சடங்கிற்காக மதியம் சென்றுவிட்டு, மீண்டும் வேலைக்கு வந்துவிட்டேன்” என தெரிவித்துள்ளார்.
அஷ்ரஃப் அலியின் இந்த செயலுக்கு பலரும் பாராட்டுகள் தெரிவித்துள்ளனர்.