மீன் மார்க்கெட் மற்றும் தற்காலிக காய்கறி மார்க்கெட்டினை ஆட்சித் தலைவர் பார்வையிட்டார் : தூத்துக்குடி

தூத்துக்குடி பழைய மற்றும் புதிய பேருந்து நிலையங்களில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக காய்கறி மார்க்கெட் மற்றும் திரேஸ்புரம் மற்றும் பூபாலராயபுரம் மீன் மார்க்கெட் பகுதிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு சந்தீப் நந்தூரி இ.ஆ.ப. அவர்கள் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மாநகராட்சி ஆணையர் திரு வீ.ப ஜெயசீலன் இ.ஆ.ப. அவர்கள் உடன் இருந்தார் பின்னர் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது :-
மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் அவர்கள் கொரானா வைரஸ் காய்ச்சல் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 144 தடை உத்தரவை பிறப்பித்துள்ளார். எனவே பொதுமக்கள் தேவை இல்லாமல் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது.

பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை அவர்களது வீட்டிற்கு சென்று வழங்கும் வகையில் மாநகராட்சி நகராட்சி பேரூராட்சி நிர்வாகத்தின் மூலம் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளது. இன்றைய தினம் ஓட்டல்கள், பேக்கரிகளில் பொதுமக்களுக்கு தேவையான உணவுப்பொருட்கள் பிரெட் போன்றவை கிடைப்பதற்கு உணவு பாதுகாப்பு அலுவலர் மூலம் நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளது.

பொதுமக்களிடையே சமூக இடைவெளியை கடைபிடிப்பதற்காக தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம் மற்றும் புதிய பேருந்து நிலையம் போன்ற பகுதிகளில் காய்கறி கடைகள் திறக்கப்பட்டன. இதைப் போன்று சிறிய கிராமங்களிலும் காய்கறி கடைகள் மளிகை கடைகள் போன்றவற்றில் சமூக இடைவெளியுடன் மக்கள் பொருட்கள் வாங்குவதற்கு தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

கொரானா வைரஸ் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருத்துவ சேவை அளிப்பதற்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புதிதாக 150 படுக்கை வசதிகளுடன் கூடிய தனிமைப்படுத்தப்பட்ட வார்டு தயார் நிலையில் உள்ளது. அதேபோன்று கோவில்பட்டி, காயல்பட்டினம், திருச்செந்தூர் போன்ற பல்வேறு அரசு மருத்துவமனைகளில் 100 படுக்கை வசதிகளுடன் கூடிய தனிமைப்படுத்தப்பட்ட வாடும் தனியார் மருத்துவமனைகளிலும் 100 படுக்கை வசதிகளுடன் கூடிய தனிமைப்படுத்தப்பட்ட வாடும் தயார் நிலையில் உள்ளது. மருத்துவமனைகளில் முகமூடி, வென்டிலேட்டர் உள்ளிட்ட மருத்துவ கருவிகள்  மருந்துகள் தேவையான அளவு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. நமது மாவட்டத்தில் இதுவரை கொரானா வைரஸ் பாதிப்பு இல்லை என்றாலும் முன்னெச்சரிக்கையாக தயார் நிலையில் இருக்கின்றோம். நமது மாவட்டத்திற்கு வெளிநாட்டிலிருந்து வந்த சுமார் 1500 பேர் வரை தொடர் கண்காணிப்பில் இருக்கின்றனர். அவர்களை கண்காணிக்க வருவாய்த்துறை அலுவலர்கள் காவல் துறையினர் மருத்துவர்கள் மற்றும் உள்ளாட்சித் துறை அலுவலர்கள் அடங்கிய தனி குழு அமைக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டில் இருந்து வந்த அவர்களின் கைகளில் ஸ்டாம்பு மற்றும் வீடுகளில் ஸ்டிக்கர் ஒட்டி தொடர்ந்து அவர்களது நடவடிக்கைகள் தினமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்த நபர்களுக்கு ஏதேனும் அத்தியாவசிய தேவைகள் இருப்பின் வீட்டிலேயே கிடைப்பதற்கு வசதியாக ஒரு கோட்டா அளவில் தனியாக ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. நமது மாவட்டத்தில் கொரானா வைரஸ் காய்ச்சல் பரவாமல் தடுக்க மாவட்ட நிர்வாகம் எடுக்கும் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என தெரிவித்தார். இந்த ஆய்வின்போது துணை இயக்குனர் வேளாண் வணிகம் திருமதி.சாந்திராணி, மாநகராட்சி நகர் நல அலுவலர் டாக்டர்.அருண்குமார், செயற்பொறியாளர் திரு.பார்த்திபன், மாநகராட்சி செயற் பொறியாளர் திரு.சரவணன் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.