அரசு பொறியியல் கல்லூரி, அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் உள்ள விடுதிகள் தற்காலிக கரோனா வார்டுகளாக மாற்றம் : தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக நடந்து வருகிறது. அதே நேரத்தில் கரோனா வைரஸ் தொற்று அதிகமானால் நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை அளிப்பதற்கான ஏற்பாடுகளும் தீவிரமாக நடந்து வருகின்றன. அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் கரோனா வைரஸ் சிகிச்சைக்கான தனிவார்டுகள் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தற்போது தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அருகே உள்ள அரசு பொறியியல் கல்லூரி, அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் உள்ள விடுதிகளில் கரோனா சிகிச்சைக்கான தனிவார்டுகள் அமைக்கும் பணி பொதுப்பணித்துறை மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த 2 கல்லூரி விடுதிகளிலும் மொத்தம் 200 படுக்கை வசதி கொண்ட வார்டு அமைக்கப்படுகிறது. 
ஒவ்வொரு அறையிலும் கழிப்பறை மற்றும் தண்ணீர் வசதி, மின்விசிறி உள்ளிட்ட அடிப்படை பணிகளை பொதுப்பணித்துறை மேற்கொண்டு வருகிறது. இந்த வார்டுகளில் படுக்கைகள் உள்ளிட்ட வசதிகளை வருவாய்த்துறை மேற்கொள்கிறது. அதன்படி நேற்று இந்த வார்டுகளுக்கான படுக்கைகள் அனைத்தும் கொண்டுவரப்பட்டன. இன்னும் ஓரிரு நாளில் 200 படுக்கை வசதி கொண்ட வார்டுகள் தயார் நிலையில் இருக்கும். மேலும் தேவைப்பட்டால் ஏற்கனவே அடையாளம் காணப்பட்டு உள்ள விடுதியுடன் கூடிய பள்ளி, கல்லூரிகள் கரோனா வார்டாக மாற்றுவதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.