உடனடியாக விரைந்து கைது செய்த தனிப்படையினருக்கு தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஜெயக்குமார் பாராட்டு

கயத்தாறு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கொலை செய்யப்பட்ட முத்துப்பாண்டி கொலை வழக்கில் சாலை விபத்து நடந்தது போன்று சம்பவத்தை உருவாக்கி நாடகமாடிய எதிரி பசுபதி பாண்டியன் உட்பட இருவரை விரைந்து கைது செய்த காவல்துறையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் பாராட்டு.

நேற்று (07.07.2020) அதிகாலை வாகன விபத்தில் கயத்தாறிலிருந்து தேவர்குளம் செல்லும் சாலையில் ஒருவர் இறந்து கிடப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் கயத்தாறு காவல் நிலைய ஆய்வாளர் திரு. முத்து தலைமையிலான காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டதில் சம்பவ இடத்தில இறந்திருப்பவர் விளாத்திக்குளம், ஆற்றங்கரை, சொக்கலிங்கபுரம், நடுத்தெருவைச் சேர்ந்த சண்முகையா மகன் முத்துப்பாண்டி என்பது தெரியவந்தது. மேலும் சம்பவ இடத்தில் டாட்டா ஏஸ் லோடு வாகனம் (TN 69 K 3584) மற்றும் இறந்த முத்துபாண்டியின் ஹீரொ ஹோண்டா ஸ்பௌண்டர் இரு சக்கர வாகனமும் சேதமடைந்திருந்தது.

காவல்துறையினர் சம்பவ இடத்தை பார்வையிட்டதிலும், சேதமடைந்த வாகனங்களை வைத்து ஒப்பிடுகையில் காவல்துறையினருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அதன் பின்னர் பல வழிகளில் விசாரணை மேற்கொண்டதில் இறந்த முத்துப்பாண்டிக்கும், இவ்வழக்கின் எதிரியான கோவில்பட்டி, தெற்கு திட்டங்குளம், மேற்கு காலணியைச் சேர்ந்த பசுபதிபாண்டியன் (வயது 19) தந்தை ஊர்காவலான் இருவருக்கும் கொய்யாப்பழம் வியாபாரம் செய்து வந்ததில் முன் விரோதம் இருந்து வந்ததும்,

அதனால் பசுபதிபாண்டியன், முத்துபாண்டியை கொலை செய்ய திட்டமிட்டு, கொலை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் டாட்டா ஏஸ் லோடு வாகனத்தை வேகமாக ஓட்டி வந்து சம்பவ இடத்தில் இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த முத்துப்பாண்டி மீது ஏற்றி கொலை செய்து விட்டு தப்பியோடியதும் தெரியவந்துள்ளது.

இச்சம்பவ இடத்தை பார்வையிட்ட தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் பார்வையிட்டு கோவில்பட்டி காவல் துணை கண்காணிப்பாளர் திரு. கலைக்கதிரவன் தலைமையில் காவல் ஆய்வாளர் திரு. முத்து மற்றும் காவல்துறையினர் அடங்கிய தனிபடை அமைத்து உடனடியாக கைது செய்ய உத்தரவிட்டார்.

மேற்படி தனிப்படையினர் இவ்வழக்கில் சம்மந்தப்பட்ட எதிரிகளான கோவில்பட்டி, தெற்கு திட்டங்குளம், மேற்கு காலணியைச் சேர்ந்த பசுபதிபாண்டியன் (வயது 19) மற்றும் தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் தாலுகா, நாயக்கர்பட்டி, இந்திரா காலணியைச் சேர்ந்த கருப்பசாமி மகன் அசோக்குமார் (22) ஆகியோரை உடனடியாக கைது செய்தனர்.

உடனடியாக விரைந்து கைது செய்த தனிப்படையினரை தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஜெயக்குமார் அவர்கள் பாராட்டினார்.