கரோனா தடுப்பு நடவடிக்கையாக வருகிற 17-ந் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டு உள்ளது. இதில் கரோனா பாதிப்பு குறைந்த மாவட்டங்களுக்கு சில தளர்வுகள் அளிக்கப்பட்டாலும், ஆட்டோ, வாடகை கார்கள், வேன்கள் இயங்க தடை நீடிக்கிறது. இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று மாலையில் வடக்கு பீச்ரோட்டில் உள்ள முகாம் அலுவலகத்தில் இருந்து ஆட்சியர் சந்தீப் நந்தூரி அலுவலகத்துக்கு சென்று கொண்டிருந்த போது, அந்த பகுதிகளில் சில ஆட்டோக்கள் ஊரடங்கை மீறி பயணிகளை ஏற்றி சென்ற ஆட்டோக்களை மடக்கி பிடித்தார். அதன்படி 4 ஆட்டோக்களை மடக்கினார். இதில் ஒரு ஆட்டோவில் மட்டும் அரசு ஊழியர் ஒருவர் மருத்துவமனைக்கு சென்றதால் அந்த ஆட்டோ விடுவிக்கப்பட்டது. மற்ற 3 ஆட்டோக்கள் போக்குவரத்து போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டு வழக்குப்பதிவு செய்தனர். இதைத் தொடர்ந்து அனைத்து ஆட்டோ ஸ்டாண்டுகளிலும் ஆட்டோக்கள் இயக்க கூடாது என்று போலீசார் எச்சரிக்கை விடுத்தனர்.
