கீழே கிடந்த மணி பர்ஸை எடுத்து காவல் நிலையம் மூலம் பணத்தை உரியவரிடம் ஒப்படைத்த நபருக்கு பாராட்டு

ரூபாய் 12,500/- பணத்துடன் கீழே கிடந்த மணி பர்ஸை எடுத்து காவல் நிலையம் மூலம் பணத்தை உரியவரிடம் ஒப்படைத்த கனகராஜ் என்பவரின் நேர்மையான செயலை கண்டு தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள், அவரை நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கி பாராட்டினார்.

கடந்த 09.07.2020 அன்று தூத்துக்குடி ஆவுடையார்புரத்தைச் சேர்ந்த பாத்திமா பீவி என்பவர் ஜாகீர் உசேன் நகருக்கு வந்து கொண்டிருக்கும்போது தான் வைத்திருந்த ரூபாய் 12,500/-யுடன் மணி பர்ஸை தவறவிட்டுள்ளார்.

தவறவிட்ட மேற்படி மணிப்பர்ஸை அப்பகுதியில் வந்து கொண்டிருந்த கனகராஜ் என்பவர் எடுத்து தூத்துக்குடி தாளமுத்துநகர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். இதனையடுத்து தூத்துக்குடி தாளமுத்து நகர் காவல் நிலைய போலீசார் கனகராஜ் மூலமாக தவறவிட்ட பணம் ரூபாய் 12,500/-ஐ பாத்திமா பீவி என்பவரிடம் ஒப்படைக்கப்பட்டது.

சிறப்பாக பணியாற்றிய காவல்துறையினரை பாராட்டுவதோடு மட்டுமல்லாமல், மேற்படி பணத்தை நேர்மையான முறையில் காவல்துறையினர் மூலமாக உரியவரிடம் ஒப்படைத்த பொதுமக்களில் ஒருவரான கனகராஜ் என்பவரையும் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார்.