குடிமராமத்து திட்டத்தின் கீழ் கண்மாய் தூர்வாரி புனரமைக்கும் பணி தொடக்கம்: அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ

தூத்துக்குடி மாவட்டம் கோரம்பள்ளம் வடிநில கோட்டம் கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியம் சிவந்திபட்டி அருகில் உள்ள தீத்தாம்பட்டி கரிசல்குளம் கண்மாய் ரூ.25 லட்சம் செலவிலும் மற்றும் கயத்தாறு ஊராட்சி ஒன்றியம் காளம்பட்டி ஊராட்சி அழகப்பபுரம் கண்மாய் ரூ.30 லட்சம் செலவிலும் குடிமராமத்து திட்டத்தின்கீழ் என மொத்தம் ரூ.55 லட்சம் செலவில் தூர்வாரி புனரமைக்கும் பணிகள் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, தலைமையில் இன்று (23.05.2020) நடைபெற்றது. நிகழ்ச்சியில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ கலந்துகொண்டு ரூ.55 லட்சம் செலவில் தூர்வாரி புனரமைக்கும் பணிகளை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.பி.சண்முகநாதன் (ஸ்ரீவைகுண்டம்), சின்னப்பன் (விளாத்திக்குளம்) ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.

பின்னர் அமைச்சர் செய்தியாளர்களிடம் தெரிவித்தாவது: தமிழ்நாடு முதலமைச்சர் விவசாய குடும்பத்தில் பிறந்ததால் விவசாயிகளுக்கு தேவையான பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். குறிப்பாக விவசாயிகளின் நலன் கருதி குடிமராமத்து திட்டம் தமிழகத்தில் சிறப்பாக செயல்படுத்துவதால் இந்திய அளவில் இத்திட்டத்திற்கு மிகுந்த வரவேற்பு பெற்றுள்ளது. நமது மாவட்டத்தில் குடிமராமத்து திட்டத்தின்கீழ் 2016-17ம் ஆண்டில் ரூ.2.31 கோடி செலவில் 28 பணிகளையும், 2017-18ம் ஆண்டில் ரூ.9.5 கோடி செலவில் 22 பணிகளையும், 2019-20ம் ஆண்டில் ரூ.13.15 கோடி செலவில் 37 பணிகளையும் மேற்கொள்ளப்பட்டது.

இந்த வருடம் (2020-21) வைப்பாறு வடிநில கோட்டம் மூலம் ரூ.1.8 கோடி செலவில் 5 பணிகளையும், கோரம்பள்ளம் வடிநில கோட்டம் மூலம் ரூ.85 லட்சம் செலவில் 3 பணிகளையும், தாமிரபரணி வடிநில கோட்டம் மூலம் ரூ.4.27 கோடி செலவில் 9 பணிகள் என மொத்தம் ரூ.7 கோடி செலவில் 17 பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. நேற்றைய தினம் (22.05.2020) வைப்பாறு வடிநில கோட்டம் மூலம் எட்டயபுரம் வட்டம் அருணாசலபுரம் கண்மாய் குடிமராமத்து திட்டத்தின்கீழ் ரூ.58 லட்சம் செலவில் தூர்வாரி புனரமைக்கும் பணிகள் தொடங்கி வைக்கப்பட்டது.

இன்று குடிமராமத்து திட்டத்தின்கீழ் கோரம்பள்ளம் வடிநில கோட்டம் கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியம் கரிசல்குளம் கண்மாய் ரூ.25 லட்சம் செலவிலும் மற்றும் கயத்தாறு ஊராட்சி ஒன்றியம் அழகப்பபுரம் கண்மாய் ரூ.30 லட்சம் செலவிலும் என மொத்தம் ரூ.55 லட்சம் செலவில் தூர்வாரி புனரமைக்கும் பணிகள் தொடங்கி வைக்கப்பட்டது. கரிசல்குளம் கண்மாய் குளத்தின் நீர் பரப்பளவு 80 ஏக்கர் ஆகும். இதில் பாசன பரப்பளவு 150 ஏக்கர் ஆகும். இந்த குளத்தின் மூலம் 95 விவசாயிகளும், அழகப்பபுரம் கண்மாய் குளத்தின் நீர் பரப்பளவு 115 ஏக்கர் ஆகும். இதில் பாசன பரப்பளவு 138 ஏக்கர் ஆகும். இந்த குளத்தின் மூலம் 90 விவசாயிகள் பயன்பெறுவார்கள். மேலும் ராஜாபுதுக்குடி கண்மாயும் ரூ.30 லட்சம் செலவில் தூர்வாரி புனரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் விவசாயிகள் தங்களது விவசாயத்திற்கு பயன்படுத்துவதற்காக இலவசமாக வண்டல் மண் வழங்கப்படும் என அறிவித்தார்கள். நமது மாவட்டத்தில் விவசாயிகள் தங்களுக்கு தேவையான வண்டல் மண்ணை உரிய அனுமதி பெற்று எடுத்து பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி தலைவர் சத்யா, கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர் விஜயா, கோரம்பள்ளம் வடிநில கோட்டம் பொதுப்பணித்துறை நீர்வள ஆதார அமைப்பு செயற்பொறியாளர் பத்மா, உதவி செயற்பொறியாளர் மணிகண்ட ராஜன், உதவி பொறியாளர் பிரியதர்சினி, வட்டாட்சியர்கள் மணிகண்டன் (கோவில்பட்டி), பாஸ்கரன் (கயத்தாறு), கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர் கஸ்தூரி சுப்புராஜ், துணைத்தலைவர் பழனிசாமி, கயத்தாறு வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சசிகுமார், சீனிவாசன், நீர் பாசன பயன்படுத்துவோர் சங்க தலைவர்கள் வேல்சாமி (கரிசல்குளம்), ஜெயசந்திரன்(அழகப்பபுரம்), இனாம்மணியாச்சி கூட்டுறவு சங்க தலைவர் மகேஷ்குமார், தீத்தாம்பட்டி பஞ்சாயத்து துணைத்தலைவர் அய்யனார், முக்கிய பிரமுகர்கள் ராமச்சந்திரன், அய்யாத்துறைபாண்டியன், வினோபாஜி மற்றும் அலுவலர்கள், முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.