கல்லூரி தேர்வுகள் – வழிமுறைகள் வெளியீடு

கல்லூரி மற்றும் பல்கலைக்கழக தேர்வுகளை நடத்தும் முறை குறித்து மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் சில அறிவுரை மற்றும் ஆலோசனைகளை வழங்கியுள்ளது. அதன்படி, கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் மாணவர்களின் பாதுகாப்பு, ஆரோக்கியம் தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் வழங்கிய வழிகாட்டுதல்கள் மற்றும் உத்தரவுகளை பின்பற்ற வேண்டும்.

கட்டுப்பாட்டு பகுதிகள் இருந்தால், மாணவர்களுக்கு வழங்கப்படும் ஹால்டிக்கெட் அல்லது அடையாள அட்டையை மாணவர்கள் பாஸாக பயன்படுத்தி கொள்ள அனுமதிக்க வேண்டும். தேர்வு மையம் உள்ள தளங்கள், அறையின் சுவர்கள், கதவுகள், வாயில்களை கிருமிநாசினி தெளித்து சுத்தம் செய்ய வேண்டும். நுழைவு வாயில், தேர்வு அறை, பார்வையாளர் அறை போன்றவற்றில் சானிடைசர் வைத்திருக்க வேண்டும்.

தேர்வு மையங்களின் வளாகங்கள், தேர்வு அறைகள், மாணவர்கள் அமரும் பகுதிகளை நாள்தோறும் சுத்தம் செய்ய வேண்டும். சமூக இடைவெளியை அடையாள படுத்த ஸ்டிக்கர் அல்லது வண்ண பெயிண்ட் மூலம் குறிக்க வேண்டும். தேர்வு அறைகளில் மாணவர்களுக்கு புதிய முககவசம் வழங்க வேண்டும் தெர்மல் ஸ்கேனிங் கொண்டு மாணவர்களின் வருகையை கணக்கிட வேண்டும்

காய்ச்சல், இருமல் மற்றும் சளி போன்ற அறிகுறிகளை கொண்ட மாணவர்கள் ஒரு தனி அறையில் உட்கார வைத்து தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் அல்லது மற்றொரு நாளில் தேர்வு எழுதுவதற்கான வாய்ப்பை நிர்வாகம் வழங்க வேண்டும் அனைத்து தேர்வு மையங்களிலும் தேர்வு பணியில் உள்ள ஆசிரியர்கள் முதல் துப்புரவு பணியில் உள்ள ஊழியர்கள் வரை அனைவரின் விவரங்களை கணினியில் பதிவு செய்ய வேண்டும் என பல்வேறு வழிமுறைகள் தெரிவிக்கப்பட்டுள்ளது.