வெளிமாநில தொழிலாளர்களை அவர்களது சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது : கலெக்டர்

முதலமைச்சர் உத்தரவுப்படி வெளிமாநில தொழிலாளர்கள் அவர்களது சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர் என கலெக்டர் சந்தீப் நந்தூரி செய்தியாளர்களிடம் கூறினார்.

அப்போது அவர் கூறுகையில் : தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து சொந்த ஊருக்கு செல்ல இதுவரை 4700 பேர் இணையதளம் மூலம் பதிவு செய்து உள்ளனர். அதில் தூத்துக்குடி, நெல்லை, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் பணியாற்றி வரும் பீகார் மாநிலத்தை சேர்ந்த 1,389 பேர் சிறப்பு ரெயில் மூலம் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர். குறிப்பாக தூத்துக்குடி மாவட்டத்தில் உடன்குடி அனல்மின்நிலையம் கட்டுமான பணியில் ஈடுபட்ட தொழிலாளர்கள் உள்பட பல்வேறு தொழிற்சாலையில் பணியாற்றியவர்கள் சொந்த ஊருக்கு திரும்பி உள்ளனர். இவர்களுக்கு வழியில் ரெயில்வே மூலம் உணவு மற்றும் குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இது போல் மற்ற தொழிலாளர்களையும் அனுப்பி வைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

மேலும் வெளிமாநிலம், வெளி மாவட்டங்களில் இருந்து தூத்துக்குடி மாவட்டத்துக்கு வருகிறவர்களை கண்காணிக்கும் பணிகள் சோதனை சாவடியில் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. வெளிமாவட்டத்தில் இருந்து வருபவர்களுக்கு கொரோனா அறிகுறிகள் இல்லாவிட்டால் வீட்டுக்கு அனுப்பி தனிமைப்படுத்தப்படுவார்கள். கொரோனா தொற்று நோய் உறுதி செய்யப்பட்டால் தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படும் என கூறினார்.