சீன அதிபரின் இந்திய வருகை – பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி

இந்திய பிரதமர் மோடியும், சீன அதிபர் ஜி ஜின் பிங்கும் வருகின்ற 11ம் தேதி  மாமல்லபுரம் வருவதை முன்னிட்டு அங்கு முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மாமல்லபுரம், சென்னை உள்ளிட்ட இடங்களில் உச்சக்கட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.  முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், மாமல்லபுரம் சென்று முன்னேற்பாடுகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்திய பிரதமர் மோடி சீனா சென்று இந்தியா, சீனா இடையேயான நட்பை மேம்படுத்தியுள்ளார், அதே போல் சீன அதிபர் ஜி ஜின் பிங் இந்தியா வருவதால், கலாச்சாரம், பண்பாடு, வணிகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இந்தியா சீனா இடையேயான நட்பு மேலும் வலுவடையும் என்றார். சீனாவிற்கும், தமிழகத்திற்கும் இடையேயான பழங்கால தொடர்புகளை நினைவு கூறும் வகையில் ஜி ஜின் பிங் பயணம் அமையும் என்றும் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.