ஓலா, உபர் ஆப்களில் புக்கில் மத்திய அரசு அறிவித்துள்ள மாற்றங்கள்

தனியார் கால் டாக்சி நிறுவனங்களான ஓலா, உபேர் நிறுவனங்களுக்கு மத்திய அரசு கட்டுப்பாடு விதித்து உத்தரவு விதித்துள்ளது. அதன்படி நெரிசல் மிகுந்த நேரங்களில் இனி தங்கள் விருப்பப்படி கூடுதலாக கட்டணம் வசூலிக்க முடியாது. அடிப்படை கட்டணத்தில் இருந்து அதிகபட்சம் 2 மடங்கு மட்டுமே வசூலிக்க வேண்டும். மற்றும் பயணம் செய்வதற்கு கார் புக்கிங் செய்துவிட்டு ரத்து செய்தால் அதிகபட்சம் வாடிக்கையாளரிடம் ரூ.100 மட்டுமே அபராதம் வசூலிக்க வேண்டும். அதைப்போல் ஒரு வாரத்தில் அதிகப்படியான எண்ணிக்கைகளை ஓட்டுநர்கள் கேன்சல் செய்தால் ஓட்டுநருக்கு புக்கிங் கொடுப்பதை ஓலா, உபர் நிறுவனங்கள் 2 நாட்கள் நிறுத்தி வைக்கலாம். பயணிகளிடம் வசூலிக்கும் தொகையில் கமிஷனாக 10 சதவீதம் மட்டுமே ஓலா, உபேர் நிறுவனங்களுக்கு ஓட்டுநர்கள் செலுத்தினால் போதும். இதன் மூலம் இனி ஓட்டுநர்கள் பயணக் கட்டணத்தில் 90 சதவீதம் கமிஷன் பெறுவர். மேலும் பயணிகள் குறிப்பாக பெண் பயணிகளின் பாதுகாப்பு கருதி அந்தந்த வாகனங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட ஓட்டுநர்தான் ஓட்டுகிறாரா என்பதை உறுதிப்படுத்தி பயோமெட்ரிக் சிஸ்டம் கொண்டு வரப்படுகிறது. அதாவது 3 மணிநேரத்திற்கு ஒருமுறை அதை வாகனத்தை ஓட்டும் ஓட்டுநர் தன்னுடைய பயோமெட்ரிக் விரல் ரேகை பதிவோ அல்லது முகம் மூலம் அடையாப்படுத்தும் ஃபேஸ் ரிகைனஷனோ பதிவு செய்ய வேண்டும். இதன் மூலம் ஓட்டுநர்கள் முகம் தெரியாத நபரிடம் வாடகைக்கு காரை கொடுத்துவிட்டு இவர் வேறு வேலையை பார்க்க செல்ல முடியாது. இதில் பயணம் செய்யும்போது விபத்து ஏற்பட்டால் வாடிக்கையாளர்களுக்கு இழப்பீடு வழங்கும் வகையில் 5 லட்ச ரூபாய் வரை காப்பீடு விதிகளும் கட்டாயமாக்கப்பட உள்ளன. இந்த விதிகள் குறித்து பொதுமக்களிடம் கருத்துக்களை கேட்டறிந்த பின்னர் நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.