தூய்மை பணியாளரைத் தாக்கியவர் மீது வழக்கு

தூத்துக்குடி அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் உமாபதி மகன் பாலமுருகன் (25) தூத்துக்குடி மாநகராட்சி குப்பைகள் சேகரிக்கும் லாரியில் தற்காலிக டிரைவராக வேலை பார்த்து வருகிறார். நேற்று மாலை டிஎம்பி காலனி பகுதியில் மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் வீடு வீடாக குப்பைகளை சேகரித்துக் கொண்டிருந்தனர். அப்போது அப்பகுதியை சேர்ந்த மூர்த்தி என்பவர் தங்களது வீட்டில் ஒழுங்காக குப்பைகளை எடுக்கவில்லை என்று கூறி தூய்மைப் பணியாளர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, தூய்மைப் பணியில் இருந்த பெண் ஊழியர்களை அவர் தகாத வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது. இதனை லாரி டிரைவர் பாலமுருகன், மூர்த்தியை தட்டிக் கேட்ட போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஆத்திரம் அடைந்த மூர்த்தி, பாலமுருகனை தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த பாலமுருகன் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில் மூர்த்தி மீது சிப்காட் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்து கணேஷ் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.