சொத்துவரி, வீட்டு தீர்வை, குடிநீர் கட்டணம் வசூலிப்பதை ஒத்திவைக்க வேண்டும் : கீதாஜீவன் எம்எல்ஏ

பேரூராட்சி, பகுதிகளில்  வசூல் செய்திடும் சொத்து வரியை மூன்று மாதங்களுக்கு ஒத்திவைத்திட கீதாஜீவன் எம்எல்ஏ., வேண்டுகோள் வைத்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட செய்திகுறிப்பில் கூறியுள்ளதாவது : உலகம் முழுவதும் கொரோனா தோற்றால் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகி வருகிறது. குறிப்பாக இந்தியாவில் இந்நோயின் தாக்கம் தற்போதுதான் தீவிரமடைந்து வருகிறது. அதனை தடுக்கும் வகையில் தமிழக அரசும், மத்திய அரசும் ஏப்ரல் 14 வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழக அரசு அளிக்கும் நிவாரண தொகையான ரூபாய் 1000 யும், காய்கனி மார்க்கெட்டில் விவசாயிகளிடம் குறைந்த விலைக்கு கொள்முதல் செய்து, பல மடங்கு கொள்ளை லாபம் பார்க்கும் வியாபாரிகளுக்கே சரியாக போய்விடும்.  அது மட்டுமில்லாது மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி அதிகாரிகள் இந்த நேரத்தில் வீட்டு தீர்வை, சொத்து வரியையும் கெடுபிடி செய்து  வசூலிக்கின்றனர்.

ஏற்கனவே ரிசர்வ் வங்கி, வீட்டுக் கடன், வாகனக் கடன் போன்ற வங்கிகளில் வாங்கிய கடனுக்கான மாதத் தவணைத் தொகை கட்டுவதில் மூன்று மாத விலக்கு அளித்துள்ளது. அதுபோல கொரோனாவில் துன்பப்படும் இந்த நேரத்தில்,  பொதுமக்களிடம் சொத்துவரி, வீட்டு தீர்வை, குடிநீர் கட்டணம் வசூலிப்பதை மூன்று மாதங்களுக்கு ஒத்திவைக்க வேண்டும்.  உடனடியாக தூத்துக்குடி ஆட்சியர் சம்பந்தப்பட்ட மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.