தொல்லியல் நோக்கில் கால்டுவெல் ஆய்வுகள்

தொல்லியல் நோக்கில் கால்டுவெல் ஆய்வுகள்
மோ.பிரசன்னா
தொல்பொருள் ஆய்வாளர்
இந்தியத்தொல்லியல் துறை, சென்னை

ஆயர் கால்டுவெல் தமிழகத்தின் தென்பகுதியான திருநெல்வேலி மாவட்டத்தை (தூத்துக்குடி மாவட்டத்தையும் உள்ளடக்கிய) பற்றிய ஆய்வுகள் அம்மாவட்டத்தின் கலாச்சாரம், வரலாறு போன்றவற்றை உலகின் வெளிச்சத்திற்கு கொண்டு வர மிக முக்கிய காரணியாக திகழ்ந்தார் .
இம்மாவட்டம் வரலாற்றில் அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதபட்டாலும் வரலாற்று அறிஞர்களால் குறைந்தபட்ச அளவே ஆய்வுகள் மேற்கொள்ளபட்டு இருக்கின்றது. சுதந்திர இந்தியாவிற்கு முன்பு ஆயர் கால்டுவெல், Jagar, Louis Lapicque, Alexandar Rea, J.K. Kearns, K.T.Kearns போன்றவர்கள் மேற்கொண்ட ஆய்வுகள் இம்மாவட்டத்தின் தொல்லியலின் முக்கியத்துவத்தை வெளிகொணர்வதற்கு முக்கிய காரணியாக திகழ்ந்தனர்.
தற்போதுள்ள தூத்துக்குடி மாவட்டத்தையும் உள்ளடக்கிய திருநெல்வேலி மாவட்டத்தின் பண்பாட்டு வளர்ச்சி நிலைகளை பழங்கற்காலம், நுண்ணிய கற்காலம், புதிய கற்காலம், இரும்புக்காலம் அல்லது பெருங்கற்காலம், வரலாற்றுத் தொடக்க காலம், வரலாற்றுக் காலம் என பிரிக்கலாம்.
மேற்கூறப்பட்ட பிரிவுகளில் ஆயர் கால்டுவெல் அவர்களின் ஆய்வுகள் இரும்புக்காலம் அல்லது பெருங்கற்காலத்தைச் சார்ந்ததாகவே இருந்தது என்பதனை அவருடைய தொல்லியல் சார்ந்த கட்டுரைகள் மூலம் அறிய முடிகிறது. அவைகள்

  1. Explorations at Korkai and Kayal (1887), Indian Antiquary Vol.6, 80-82
  2. Excavations at Kayal (1887), Indian Antiquary Vol.6, 82-83
  3. Sepulchral Urns in Southern India (1887) Indian Antiquary Vol.6, 279-280

ஆயர் கால்டுவெல் ஆய்வு செய்த பெருங்கற்காலம் அல்லது இரும்புக்காலம்

இறந்தவர்கள் நினைவாக பெரிய கற்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட நினைவுச்சின்னங்கள் விந்திய மலைக்குத் தெற்கே இந்தியாவின் தீபகற்பப் பகுதியில் நிறைந்து காணப்படுகின்றன. பெருங்கற்களைக் கொண்டு நீத்தோர் நினைவுச் சின்னங்கள் உருவாக்கப்பட்டதன் காரணத்தால் இக்காலம் “பெருங்கற்காலம்” என அழைக்கப்படுகின்றது. தென்தமிழகத்திலும், ஆற்றுப்படுக்கைகளிலும் பெருங்கற்படைகளுக்கு பதிலாக ஈமத்தாழிகள் பயன்படுத்தப்பட்டன. இவ்வழக்கம் தமிழகத்தில் ஏறக்குறைய கி.மு 1500 முதல் கி.பி முதலாம் நூற்றாண்டு வரை இருந்தது .
பொதுவாக பெருங்கற்காலத்தில் அமைக்கப்பட்ட நினைவுச் சின்னங்களை கற்பதுக்கை, கற்திட்டை, கல்வட்டம், ஈமத்தாழி, தொப்பிக்கல், குடைக்கல். குடைவரைக்கல்லறை என்று பிரிக்கலாம் .
ஈமச்சின்னங்களில் பல வகைகள் காணப்பட்டாலும் திருநெல்வேலி மாவட்டத்தைப் பொறுத்தவரையில் தாழிகளைப் பயன்படுத்தி அமைக்கப்பட்ட ஈமச்சின்னங்களே அதிக அளவில் காணப்படுகின்றன. தாழிகளால் அமைக்கப்பட்ட ஈமச்சின்னங்கள் பெரும்பாலும் அப்பகுதியில் “பரம்பு” என்றழைக்கப்படும் அதிக பளிங்கு கற்களுடன் கூடிய மணல் பகுதியிலே அமைக்கப்பட்டுள்ளன. ஆயர் அவர்கள் ஆய்வு செய்த இடங்களான கொற்கை, காயல், மாறமங்கலம், இலஞ்சி, புதுக்குடி போன்ற பகுதிகளில் பெரும்பாலும் முதுமக்கள் தாழிகளே கிடைத்தன.

அகழாய்வுகள்

மனிதன் தோன்றியகாலம் முதல் எழுத்தாவணங்களான இலக்கியங்கள் படைக்கப்பட்ட காலம் வரையிலான, இடைப்பட்ட காலகட்டத்தில் வாழ்ந்த மனிதனின் நடவடிக்கைகளைத் தெரிவிப்பது அவன் விட்டுச்சென்ற தொல்பொருள்களே. அவை இம்மண்ணுலகில் மறைந்து மட்கி மண்மூடி மேடுகளாய் காட்சியளிக்கின்றன. அவற்றை வெளிக்கொணரும் முயற்சியே தொல்லியலின் முதுகெலும்பாக விளங்கும் அகழாய்வு ஆகும்.
ஆயர் அவர்கள் அகழாய்வு என்ற ஒன்று இந்தியாவில் அறியப்படாத காலங்களிலே அப்பணியினை செய்து தொல்லியல் ஆய்வாளர்களில் முன்னோடியாக திகழ்கிறார்.
ஆயர் அகழாய்வும் களஆய்வும் செய்தப் பகுதிகள்

 கொற்கை
 காயல்
 மாறமங்கலம்
 இலஞ்சி
 புதுக்குடி

கொற்கை

தற்போதுள்ள தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்ரீவைகுண்டம் வட்டத்தில் அமைந்துள்ள கொற்கை சங்ககாலத்தில் புகழ்பெற்ற துறைமுகமாக விளங்கிய இவ்வூர் பாண்டியர்களின் தலைநகரமாகவும் விளங்கியது. ‘புகழ்மலி சிறப்பின் கொற்கை’ முத்துபடு பரப்பின் கொற்கை முன்துறை ’ எனப் பலவாறாக சங்க இலக்கியகள் இவ்வூரினைப் பற்றிப் புகழ்ந்துரைக்கின்றன.பாண்டிய மன்னர்கள் ‘கொற்கைக் கோமான் ’ ‘கொற்கை வேந்து’ என்றும் வெற்றிவேற் செழியனுடைய தலைநகர் என்றும் கொற்கையுடன் இணைத்துப் புகழ்படுகின்றனர்.
இவ்வாறு பெருமை மிகுந்த கொற்கையில் ஆயர் அவர்கள் மேற்கொண்ட அகழாய்வில் 10 அல்லது 12 கூலியாட்களை கொண்டு அப்பகுதியில் வெவ்வேறு இடங்களில் அகழாய்வு செய்ததின் மூலம் 3 இடங்களில் முதுமக்கள் தாழியினை கண்டறிந்தார்.
அவற்றில் 2 முதுமக்கள் தாழியினுள் எவ்வித ஈமச்சின்னங்கள் மற்றும் அரிய பொருட்கள் கிடைக்கவில்லை எனவும் ஆனால் அம்முதுமக்கள் தாழியினுள் மட்கிய நிலையில் மனித எலும்புகள் துகள்களாக இருந்ததாகவும் மூன்றாவதாக கிடைத்த முதுமக்கள் தாழியினுள் முழுமையான மனித எலும்புகள் உடைந்த நிலையில் தான் கண்டறிந்ததையும், மேலும் அவ்வாறு கிடைத்த முதுமக்கள் தாழிகளில் ஒரு தாழியானது 11 அடி சுற்றளவுடன் உடைந்த நிலையில் காணப்பட்டதையும் தன் கட்டுரையில் ஆயர் அவர்கள் பதிவு செய்கிறார் .

காயல்பட்டினம்:

காயல் அல்லது பழையகாயல் என்று அழைக்கப்படும் இப்பகுதி சங்ககாலத் துறைமகமாகிய கொற்கையின் புகழ் மங்கிய பிறகு அதே பகுதியில் இடைக்காலத்தில் பாண்டியர்களின் சிறந்த துறைமுகமாக காயல்பட்டினம் உருவானது.
கி.பி.13ஆம் நூற்றாண்டில் இத்தாலிய கடல் பயணி மார்க்கோ போலோ சீனாவிலிருந்து கடல்வழியாக இத்துறைமுக நகரை வந்தடைந்த அவர் இத்துறைமுக நகரை காயல் (Cail) என்று குறிப்பிடுவதோடு மட்டுமின்றி, ஒரு சிறந்த, மாபெரும் நகராகவும் குறிப்பிடுகின்றார்.
மார்க்கோ போலோ இத்துறைமுக நகரைப் பற்றி விவரிக்குமிடத்தில் “மேற்கத்திய நாடுகளிலிருந்து வரும் கப்பல்கள்யாவும் இத்துறைமுகம் வந்து சென்றதாகவும், அரேபியர்கள் மிக அதிகமாக வாழும் செங்கடல் மற்றும் ஏடன் வளைகுடாவிற்கு இடைப்பட்ட பகுதிகளில் காணப்படும் கடல்சார் நாடுகள் குறிப்பாக ஆர்மோஸ், கிஸ் மற்றும் ஏடன் பகுதிகளிலிருந்து அதிகமாக இத்துறைமுகத்திற்கு குதிரைகள் ஏற்றுமதி செய்யப்பட்டதாகவும் இதன்வழி பிற நாடுகளைச் சேர்ந்த வணிகர்களின் இறக்குமதிப் பொருட்களுக்கு முக்கிய வியாபாரத் தலமாகவும் காயல் இருந்தது” எனக் குறிப்பிடுவதை தன்னுடைய ஆய்விலும் ஆயர் அவர்கள் குறிப்பிடுகிறார் .
ஆயர் அவர்கள் இப்பகுதியில் செய்த களஆய்வில் கிடைத்த பானையோடுகளில் மூலம் இப்பகுதியானது வாணிப நகரமாக இருந்திருக்கக்கூடும் என்றும் மேலும் அவர்கள் தான் அமைத்த கூலியாட்களை பயன்படுத்தி ஏரியின் அருகே ஒரு பகுதியனை அகழாய்வு செய்து கொற்கையில் கண்டுறியப்பட்ட முதுமக்கள் தாழியினை போன்றே 11 அடி சுற்றளவு உள்ள முதுமக்கள் தாழியினை கண்டறிந்தார் என்பதினையும் குறிப்பிடுகிறார்.
மேலும் இப்பகுதியில் முதுமக்கள் தாழியினை உள்ளூர் மக்கள் மதமதக்கான்தாழி என்று அழைப்பிதனையும் அத்தாழியில் மனித எலும்புகளும், மண்டையோடு கிடைத்ததை தெரிவித்ததோடு மட்டுமில்லாமல் அம்மண்டையோட்டில் ஆயதத்தைப் பயன்படுத்தி துளையிடப்பட்டதையும் தன் ஆய்வில் தெரிவிக்கிறார்.
மேலும் காயல்பட்டினம் மற்றும் கொற்கை அருகேயுள்ள மாறமங்கலத்திலும், தென்காசி அருகேயுள்ள இலஞ்சியிலும் முதுமக்கள் தாழியினை தான் கண்டறிந்ததையும் தன் ஆய்வில் தெரிவிக்கிறார்.
தன் ஆய்வுகளை முதுமக்கள் தாழியினை கண்டு அறிவதோடு மட்டும் நிறுத்தி விடாமல் இலஞ்சியில் முதுமக்கள் தாழியினுள் கிடைத்த மண்டையோடுகள் மற்றும் பற்களை Dr.Fry, Surgeon to the Resident of Travancore அவர்களிடம் கொடுத்து ஆய்வு செய்தார். அவ்வாய்வில் அப்பகுதி மக்கள் தானியங்களை உணவாக உட்கொண்டனர்கள் என்பதினையும் ஆய்வில் கிடைத்த முடிவினை தன் கட்டுரையில் பதிவு செய்து தொல்லியலை மென்மேலும் உயர்ந்த நிலைக்கு கொண்டு சென்றார் ஆயர் .