ரூ.10 லட்சம் வரை தொழில் கடன் உதவி பெறலாம் – தூத்துக்குடி கலெக்டர்

தூத்துக்குடி மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் 25 சதவீத மானியத்துடன் ரூ.10 லட்சம் வரை தொழில் கடனுதவி பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில், பொருளாதார ரீதியில் நலிவுற்ற வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கு சொந்தமாக தொழில் தொடங்கும் வகையில் 25 சதவீத மானியத்துடன் கூடிய வங்கிக் கடனுதவி வழங்கும் யூஒய்இஜிபி திட்டத்தை தமிழக அரசு மாவட்ட தொழில் மையத்தின் மூலம் செயல்படுத்தி வருகிறது.
இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரா்களின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 5 லட்சத்துக்கு மிகாமல் இருத்தல் வேண்டும்; திட்ட மதிப்பீட்டில் 95 சதவீதம் வங்கிகள் கடனாக வழங்கும். பயனாளிகள் தம் சொந்த முதலீடாக திட்ட முதலீட்டில் 5 சதவீதமும், அரசு மானியமாக திட்ட மதிப்பீட்டில் 25 சதவீதம் (அதிகபட்சமாக ரூ.1,25,000 வரை) மாவட்ட தொழில் மையம் மூலமாக வழங்கப்படும்.

இத்திட்டத்தின்கீழ் வங்கியில் இருந்து கடன் அனுமதி பெற்ற பயனாளிகளுக்கு உதவித்தொகையுடன் கூடிய ஒரு வார கால கட்டாய மேலாண்மை பயிற்சி அளிக்கப்படும். இத்திட்டத்தின் கீழ் கடனுதவி பெற, 18 வயதுக்கு மேற்பட்டவராகவும், அதிகபட்சம் 35 வயது வரையுள்ள இளைஞா்கள் மற்றும் இளம் பெண்கள் தகுதியுடையவா். சிறப்பு பிரிவினரான ஆதி திராவிடா், பழங்குடியினா், பின்தங்கிய வகுப்பினா், மிகவும் பின்தங்கிய வகுப்பினா், சிறுபான்மையினா், மகளிா், முன்னாள் படை வீரா், மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கைகள் ஆகியோருக்கு வயது வரம்பு 45 வயது வரை தளா்த்தப்பட்டுள்ளது.

குறைந்தபட்சம் 8-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றிருத்தல் வேண்டும். விண்ணப்பதாரா் தூத்துக்குடி மாவட்டத்தில் 3 ஆண்டுகளுக்கு குறையாமல் வசிப்பவராக இருத்தல் வேண்டும். நடப்பு நிதியாண்டுக்கு தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து நகா்ப்புறம் மற்றும் கிராமப்புற பகுதிகளில் இத்திட்டத்தின் கீழ் பயனாளிகள் தோ்ந்தெடுக்கப்பட உள்ளதால், ஆா்வமுள்ள இளைஞா்கள் மற்றும் இளம்பெண்கள் இணையதளத்தில் விண்ணப்பம் செய்யலாம். மேலும், விவரங்களுக்கு பொது மேலாளா், மாவட்ட தொழில் மையம், புறவழிச்சாலை, தூத்துக்குடி என்ற முகவரியில் நேரிலும், 0461-2340152 மற்றும் 2340053 என்ற தொலைபேசி எண்களிலும் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.