தூத்துக்குடியில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதனால் பி.எஸ்.என்.எல் சந்தாதாரர்கள் வேலிடிட்டி முடிவு பெற்று அக்கவுண்டில் பேலன்சும் இல்லாமல் படும் சிரமங்களை கருத்தில் கொண்டு பி.எஸ்.என்.எல். நிறுவனம் சந்தாதாரர்கள், இன்கம்மிங் அழைப்புகளை இலவசமாக பெறுவதற்கு வழிவகை செய்யப்பட்டு வேலிடிட்டியை மே மாதம் 5-ந் தேதி வரை இலவசமாக நீட்டித்து உள்ளது. இருப்பினும் அனைத்து வாடிக்கையாளர்களின் அவசர தகவல் தொடர்பு தேவைகளை பூர்த்தி செய்வதற்காக அனைத்து வேலை நாட்களிலும் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை அனைத்து வாடிக்கையாளர் சேவை மையங்களையும் திறந்து வைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. எனவே ஆன்லைன், டிஜிட்டல் முறையில் ரீசார்ஜ் செய்ய முடியாதவர்கள் வாடிக்கையாளர் சேவை மையத்தில் அவசர ரீசார்ஜ் மற்றும் பில் கட்டணம் செலுத்தும் சேவைகளை பெறலாம். வாடிக்கையாளர் சேவை மையங்களுக்கு செல்லும் வாடிக்கையாளர்கள் முக கவசம் மற்றும் பிற பாதுகாப்பு சாதனங்களை அணிந்து சமூக விலகல் நடைமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.
பில் கட்டணங்களை செலுத்துவதற்கான கடைசி தேதி வருகிற 27-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. வாடிக்கையாளர்கள் தங்கள் வீட்டின் அருகில் உள்ள பி.எஸ்.என்.எல் நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்ட கடைகளுக்கு சென்றும் பில் கட்டணங்களை செலுத்தலாம்.
பி.எஸ்.என்.எல். நிறுவனம் ஊரடங்கு நேரத்திலும் தடையில்லா சேவைகளை வழங்க தங்களால் இயன்ற முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. எனவே பொதுமக்கள் அரசு மேற்கொண்டு உள்ள நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு அளித்து கொரோனா வைரஸ் மேலும் பரவுவதை கட்டுப்படுத்தி அனைவரது பாதுகாப்பையும் உறுதிபடுத்த உதவுமாறு தூத்துக்குடி பி.எஸ்.என்.எல். பொதுமேலாளர் அலுவலகம் செய்திக் குறிப்பு வெளியிட்டுள்ளது.