உப்பு தொழிலாளர்கள் மே 22ம் தேதி சம்பள உயர்வுக்காக போராட்டம் நடத்த உள்ளனர்

தூத்துக்குடியில் சம்பள உயர்வு கோரி உப்பு தொழிலாளர் சங்கத்தினர் நாளை 22ம் தேதி போராட்டம் நடத்த உள்ளனர்.

இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட உப்பு தொழிலாளர் சங்க தலைவர் பொன்ராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது: உப்பள தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு ஒப்பந்தம் கடந்த ஏப்ரல் மாதம் 29-ந்தேதியுடன் முடிவடைந்தது. இதையடுத்து உப்பள நிர்வாகத்துக்கும், தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கும் இடையே சம்பள பேச்சுவார்த்தை நடந்தது. அதில், தமிழக அரசின் குறைந்தபட்ச சம்பள சட்டத்தின்படி நாள் ஒன்றுக்கு ரூ.440 வழங்க சி.ஐ.டி.யு. சங்கம் சார்பில் வலியுறுத்தப்பட்டது. 
ஆனால் உப்பள நிர்வாகம் இதனை ஏற்காமல், ஆண்களுக்கு ரூ.405-ம், பெண்களுக்கு ரூ.395-ம் வழங்குவதாக தெரிவித்தது. இதனால் சி.ஐ.டி.யு. உப்பு தொழிலாளர் சங்கம் ஏற்கவில்லை. எனவே சட்ட விரோத தொழிலாளர் விரோத ஒப்பந்தத்தை ரத்து செய்து, தமிழக அரசின் குறைந்தபட்ச கூலி சட்டத்தின்படி ஆண், பெண் இருபாலருக்கும் ரூ.440 சம்பளம் வழங்க, தமிழக அரசையும், தொழிலாளர் துறையையும் வலியுறுத்தி நாளை (வெள்ளிக்கிழமை) காலை 11 மணிக்கு தூத்துக்குடி காமராஜ் கல்லூரி அருகில் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது..

Credit : Tutyonline