எங்கு எங்கு ஊரடங்கு தளர்த்தப்படும்?

நாட்டில் ஊரடங்கு நிலையே தொடர வேண்டுமா என்பது தொடர்பாக அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தியுள்ளார்.

ஊரடங்கு தளர்வு என்பது அமலாக்கப்பட்டால் பாதிப்பு தொடரக் கூடும் அல்லது அதிகரிக்கக்கூடும் என்று பல முதல்வர்கள் கவலை தெரிவித்தனர். அதே நேரம் இப்படியே ஊரடங்கு நிலைமை தொடர்ந்தால் வேலைவாய்ப்பு வருமானம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை மக்கள் எதிர்கொள்வார்கள். முதல்வர்களின் ஆதங்கத்தை ஏற்றுக் கொண்ட மோடி, சில மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவை தொடரலாம் என்று யோசனை தெரிவித்துள்ளார். அதாவது பசுமை மண்டலம், என்று அழைக்க கூடிய, ஒரு கொரோனா நோய் பாதிப்பு கூட இல்லாத பகுதிகளில் ஊரடங்கு உத்தரவை தளர்த்தி, அந்த மாவட்டத்திற்குள் மட்டும் போக்குவரத்தை அனுமதிக்கலாம். மற்ற இடங்களில் ஊரடங்கு உத்தரவை தொடரலாம் என்று மோடி கூறியுள்ளார். தமிழகத்தை பொறுத்தவரை கடந்த 10 நாட்களாக நீலகிரி, கன்னியாகுமரி, ராணிப்பேட்டை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் புதிதாக பாதிப்பு தொற்று கண்டறியப்படவில்லை. நீலகிரியில் 16 நாட்களாகவும், ராணிப்பேட்டையில் 14 நாட்கள், கன்னியாகுமரியில் 13 நாட்கள், ஈரோட்டில் 12 நாட்கள், வேலூர், கரூர், தேனி ஆகிய மாவட்டங்களில் 10 நாட்களாக யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என தமிழக சுகாதாரத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 20க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்ட ஒரு பகுதியில் 14 நாட்கள் புதிதாக தொற்று கண்டறியப்படவில்லை என்றால், அந்தப்பகுதி ரெட் ஸோனில் இருந்து ஆரஞ்ச் ஸோனாக மாற்றப்படும்.
ரெட் ஸோனில் இருக்கும் ராணிப்பேட்டை, கன்னியாகுமரி, ஈரோடு, வேலூர், கரூர், தேனி ஆகிய மாவட்டங்கள் ஆரஞ்ச் ஸோனுக்கு மாற்றப்படும் என தெரிகிறது. அப்படி மாற்றப்பட்டால் ஊரடங்கில் இருந்து தளர்வு கிடைக்கும். அதாவது கடைகள் திறந்திருக்க அனுமதி, கட்டுப்பாடுகளுடன் பயணம் மேற்கொள்ளலாம் உள்ளிட்ட அனுமதி கிடைக்க வாய்ப்பு உள்ளது. பாதிப்பு 20க்கும் குறைவாக உள்ள அரியலூர், தருமபுரி, கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, திருப்பத்தூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களுக்கு ஊரடங்கு தளர்த்தப்படும் என தெரிகிறது. சென்னை, கோவை, மதுரை, திண்டுக்கல், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் ஊரடங்கு தொடர்ந்து நீட்டிக்கப்பட வாய்ப்பு இருப்பதாகவே கூறப்படுகிறது.