கந்துவட்டிக்கு வங்கி மூலம் கடன் வழங்கும் திட்டம்!

மதுரை மாவட்டம் தத்தநேரி பகுதியை சேர்ந்த குமார் என்பவர் அதே பகுதியைச் சேர்ந்த நாகராஜ் என்பவரிடம் கடந்த 2014-ம் ஆண்டு கடனாக 2,00,000 ரூபாய் வாங்கியுள்ளார். வாங்கிய கடனுக்கு மேலாக ரூ. 3 லட்சத்தை வட்டி தொகையாக குமார் செலுத்தியுள்ளார். இருப்பினும் கூடுதல் பணத்தை வட்டியாக கேட்ட நாகராஜ் கட்டமுடியவில்லை என்றால் உன் வீட்டை என் பெயருக்கு எழுதிக்கொடு என்று கூறி மிரட்டியுள்ளார். இதை குமார் ஏற்கவில்லை என்றதும் கடந்த 11 ஆம் தேதி குமார் வெளியூர் சென்றிருந்த சமயத்தில் ஆட்களை அழைத்து குமார் வீட்டை இடித்து தள்ளியுள்ளார் நாகராஜ். இதனையடுத்து மதுரை மாநகர் காவல் ஆணையர் டேவிட்சன் தேவ ஆசீர்வாதத்தை நேரில் சந்தித்து குமார் புகார் அளித்தார். விசாரணையில் கந்துவட்டிக்காரர் உள்பட 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். தற்போது கந்துவட்டி கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில் மதுரையில் முதன்முறையாகப் பாதிக்கப்பட்டு பணம் செலுத்த முடியாமல் தவிக்கும் மக்களுக்கு வங்கிகள் மூலம் கடனுதவி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று மாவட்ட ஆட்சியர் வினய் தெரிவித்துள்ளார்.