பேக்கரிகளில் நிபந்தனைகளை மீறும் பட்சத்தில் உரியநடவடிக்கை எடுக்கப்படும் : மாவட்ட ஆட்சியர்

தமிழ்நாடு அரசு கரோனா நோய் பரவுதலின் தடுப்பு நடவடிக்கையாக, ஊரடங்கு உத்திரவை பிறப்பித்துள்ளது. ஆனால், பொதுமக்களுக்கு உணவு போன்ற அத்தியாவசியபொருட்களின் தயாரிப்பு மற்றும் விற்பனைக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. எனவே, லாரி ஓட்டுநர்கள், ஏற்றுமதி சார்ந்த பணியாளர்கள், தினக்கூலிகள் மற்றும் நோயாளிகள் போன்ற பொதுமக்களின் உணவுத் தேவையை கருத்தில் கொண்டும், பிரட், பன், பிஸ்கட் மற்றும் ரஸ்க் போன்றவை தட்டுப்பாடில்லாமல் கிடைப்பதற்காகவும், பேக்கரிகளை இயக்க தமிழக முதல்வர் கனிவுடன் அனுமதி அளித்துள்ளதின் அடிப்படையில், பின்வரும் நோய் தடுப்பு நடவடிக்கை நிபந்தனைகளுக்குட்பட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பேக்கரிகளை காலை 6 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை திறந்து விற்பனை செய்ய நிபந்தனைகளுடன் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

நிபந்தனைகள்

1. பேக்கரியின் பணியாளர்களுக்கு புகைப்படத்துடன் கூடியஅடையாள அட்டையை நிறுவன உரிமையாளர் வழங்க வேண்டும்.

2. பணியாளர்களை அழைத்துச் செல்லும் வாகனத்திற்கு அனுமதி சீட்டு பெற வேண்டும்.

3. பேக்கரியின் பணியாளர்கள் முகக்கவசம் அணியவேண்டும், க்ளவுஸ், தலைமுடிக் கவசம் ஆகியவற்றைக் கண்டிப்பாக அணிந்திருக்க வேண்டும்.

4. பணியாளர்கள் பேக்கரிக்குள் செல்லும் முன்பும் பேக்கரியைவிட்டு வெளியே செல்லும் போதும் மட்டுமில்லாமல், மற்ற நேரங்களிலும் கைகளை அடிக்கடி சோப்பு பயன்படுத்தி நன்கு கழுவிடல் வேண்டும்.

5. பணியாளர்களுக்கிடையே சமூக அயல் நிறுத்தம் பின்பற்றிட வேண்டும்.

6. பணியாளர் எவருக்கேனும் சளி, காய்ச்சல் இருந்தால் அவர்களை உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பிவிட வேண்டும். அவரை பேக்கரியில் பணிபுரியஅனுமதிக்கக்கூடாது.

7. பேக்கரிக்கு வருகை தரும் நுகர்வோர்களையும் சமூக அயல் நிறுத்தம் பின்பற்றிடச் செய்திடல் வேண்டும்.

8. பேக்கரியில் நுகர்வோர் எவரையும் அமர்ந்து சாப்பிட அனுமதிக்கக்கூடாது.

9. பேக்கரியில் பிரட், பன், ரஸ்க் மற்றும் பிஸ்கட் போன்றவற்றுடன் இதர தின்பண்டங்களையும் தயாரித்து விற்பனை செய்யலாம்.

10. பேக்கரிகள் காலை 6 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மட்டுமே இயங்க வேண்டும். பேக்கரிகள் இயங்குவதற்கான அனுமதி நேரத்தை தமிழக அரசு பின்வரும் நாட்களில் மாற்றியமைக்கும்பட்சத்தில், பேக்கரி உரிமையாளர்கள் அரசால் வரையறுக்கப்பட்ட நேரத்திற்குள் மட்டுமே செயல்பட வேண்டும்.

11. பேக்கரிகளில் டீ, கா/பி போன்றவை விற்பனை செய்திடல் கூடாது.

எனவே, பேக்கரி உரிமையாளர்கள், மேற்கூறிய நிபந்தனைகளை தவறாமல் பின்பற்றி பேக்கரிகளை இயக்கி பொதுமக்களுக்குத் தட்டுப்பாடில்லாமல் பொருட்கள் தரமானதாகவும், போதிய அளவிலும் கிடைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றது. மேலும், நிபந்தனைகளை மீறும் பட்சத்தில் உரியநடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.