கொரானோ காய்ச்சல் பரவாமல் தடுக்கும் வழிமுறைகள் மற்றும் விழிப்புணர்வு : தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொரானோ காய்ச்சல் பரவாமல் தடுக்கும் வழிமுறைகள் மற்றும் விழிப்புணர்வு தொடர்பான அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு சந்தீப் நந்தூரி இ.ஆ.ப. அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் பேசியதாவது : உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் கொரானோ காய்ச்சல் பரவி பல்வேறு உயிர் சேதங்களை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவில் இதுவரை 78 நபர்களுக்கு கொரானோ காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒருவர் இருந்துள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் கொரானோ பாதிப்பு ஏதுமில்லை. இதுவரை வெளிநாடுகளுக்கு சென்று வந்த நபர்கள் மூலம் தொற்று ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டாலும், சாதாரண மக்களுக்கு பரவவிடாமல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசு பல்வேறு அறிவுரைகளை வழங்கியுள்ளது. மருத்துவமனைகளில் கிருமி நாசினிகளை கொண்டு முழுமையாக துடைத்து சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். மருத்துவமனையில் பணிபுரியும் அனைத்து பிரிவு பணியாளர்களுக்கும் கொரானோ தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய சுகாதார நடவடிக்கை தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டும். மேலும் பொதுமக்கள் அவசியம் இல்லாமல் அதிக கூட்டமான இடங்களுக்கு செல்ல வேண்டாம் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்திட வேண்டும். அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு வரும் காய்ச்சல் நோயாளியிடம், அவர் வெளிநாடு சென்று வந்தாரா என்ற பயண விவரங்களை தெரிந்து கொள்ள வேண்டும். கொரானோ உறுதி செய்யப்பட்டால் அவரது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் அவர் சந்தித்த நபர்களையும் பரிசோதிக்க வேண்டும். மருத்துவமனைகளில் தேவையான கிருமிநாசினிகள், மாஸ்க்குகள் இருப்பில் வைக்க வேண்டும். கொரானோ குறித்து பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை. தூத்துக்குடி மாவட்டத்தில் கொரானோ காய்ச்சல் பாதிப்பு ஏதுமில்லை. அன்றாட மாநிலமான கேரளா மாநிலத்தில் பாதிப்பு உள்ளதால் நாம் மிகுந்த விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். தனியார் மருத்துவமனைகள் மருத்துவத் துறை அலுவலர்களுடன் தொடர்பில் இருக்க வேண்டும். கொரானோ பாதிப்பு குறித்து மாவட்ட நிர்வாகத்துக்கு உடனுக்குடன் தகவல் அனுப்ப வேண்டும். அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து தூத்துக்குடி மாவட்டத்தில் கொரானோ காய்ச்சல் பாதிப்புகள் எதுவும் இல்லாத நிலையையும், விழிப்புணர்வையும் உருவாக்க வேண்டும் என பேசினார்.

கூட்டத்தில் மருத்துவ பணிகள் இணை இயக்குனர் மரு. பரிதாசெரின், தூத்துக்குடி துணை இயக்குனர் (சுகாதாரப்பணிகள்) மரு. கிருஷ்ண லீலா, அரசு மருத்துவமனை மருத்துவர்கள், தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.