கடல்வாழ் உயிரினங்கள் குறித்த விழிப்புணர்வு கண்காட்சி : தூத்துக்குடி

தூத்துக்குடி மன்னார்வளைகுடா உயிர்கோள காப்பக அறக்கட்டளை சார்பில் கடல்வாழ் உயிரினங்களை பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வு கண்காட்சி தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் நேற்று நடைபெற்றது. கண்காட்சியின் தொடக்க விழாவிற்கு தூத்துக்குடி மாவட்ட உதவி வன பாதுகாப்பாளர் பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். காமராஜ் கல்லூரி முதல்வர் நாகராஜ் முன்னிலை வகித்தார். மற்றும் சிறப்பு அழைப்பாளராக மன்னார் வளைகுடா உயிர்கோள காப்பக அறக்கட்டளை இயக்குனர் மற்றும் வன உயிரின காப்பாளர் A.S மாரிமுத்து கலந்துகொண்டு தொடங்கி வைத்தார்கள். நிகழ்ச்சி ஏற்பாடுகளை தூத்துக்குடி மன்னார் வளைகுடா உயிர்கோள காப்பக வனச்சரக அலுவலர் ரகுவரன், மாணவர்கள் மதன்குமார், முத்துராம், அருண்குமார், வனக்காப்பாளர்கள், வேட்டை தடுப்பு காவலர்கள் ஆகியோர் செய்து இருந்தனர்.

மன்னார் வளைகுடா கடல் பகுதியில் சுமார் 4200 க்கும் அதிகமான அரிய வகை கடல்வாழ் உயிரினங்கள் உள்ளன. கண்காட்சியில் திமிங்கல வகைகள்,

ஓங்கிகள், கடல்பசு, கடலாமை, சுறா, கங்கை சுறா, பனைமீன்,பால் சுறா, கடல்குதிரை, திருக்கை, வேளா மீன், கடல் தாவரங்கள், பவளப்பாறைகள், கடல் விசிறிகள்,

கடல் அட்டைகள், மற்றும் கடல் சங்கு வகைகள் போன்ற கடல் வாழ் உயிரினங்களின் பதப்படுத்திய மாதிரிகள் கண்காட்சியில் வைக்கப்பட்டன.

மேலும் கண்காட்சியில் கடல்வாழ் உயிரினங்களின் உணவு சங்கிலி முறையின் முக்கியத்துவம் குறித்தும், சுற்றுச்சூழல் மாசு புவி வெப்பமயமாதல் போன்றவற்றால் மன்னார் வளைகுடா பகுதியில் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் மாணவ-மாணவிகளுக்கு விளக்கும் கூறப்பட்டது.

கண்காட்சியை தூத்துக்குடி மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் ஆர்வமுடன் கண்டு ரசித்தனர்.