அவனியாபுரம் ஜல்லிக்கட்டு

தமிழர்களின் வீர விளையாட்டு அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: சீறிப் பாயும் காளைகள்; வீரத்தோடு அடக்கும் மாடுபிடி வீரர்கள்!

உலகப் புகழ்பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிகள் இன்று காலை கோலாகலமாக தொடங்கி இருக்கிறது. நூற்றுக்கணக்கான காளைகளை அடக்க மாடுபிடி வீரர்கள் ஆர்வத்துடன் களத்தில் இறங்கியுள்ளனர். இதைக் காண ஏராளமான பொதுமக்கள் திரண்டுள்ளனர்.

தமிழர்களின் வீர விளையாட்டு

தமிழர்களின் வீர விளையாட்டுகளில் ஒன்றாக ஜல்லிக்கட்டு திகழ்கிறது. இதனை ஏறு தழுவுதல், மஞ்சு விரட்டு என்றும் அழைக்கின்றனர். காளைகளை ஓடவிட்டு அதனை விரட்டி சென்று திமிலை பிடித்து வீரர்கள் அடக்குவர். பழங்காலம் முதலே ஜல்லிக்கட்டு நடத்தி வந்ததற்கான சான்றுகள் இருக்கின்றன.

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு

இதில் வெற்றி பெறும் வீரர்களுக்கு பல்வேறு பரிசுகள் வழங்கப்படுகின்றன. மதுரை மாவட்டம் அவனியாபுரம், அலங்காநல்லூர், பாலமேடு ஆகிய ஊர்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகள் உலகப் புகழ்பெற்றவை. இதைக் காண பல்வேறு பகுதிகளில் இருந்து மக்கள் திரண்டு வருவர்.

மீட்டெடுத்த மெரினா புரட்சி

ஜல்லிக்கட்டு போட்டியின் போது காளைகள் துன்புறுத்தப்படுவதாக கூறி சில ஆண்டுகளுக்கு முன்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து ”மெரினா புரட்சி” என்று அழைக்கப்படும் மிகப்பெரிய போராட்டத்தை நடத்தி ஜல்லிக்கட்டை தமிழர்கள் மீட்டெடுத்தனர்.

ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு

இந்நிலையில் ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு அவனியாபுரத்தில் இன்று காலை 8 மணி தொடங்கியுள்ளது. இதில் 700 காளைகளும், 730 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றுள்ளனர். மதுரை, திண்டுக்கல், தேனி, கம்பம், திருச்சி, ராமநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து காளைகள் ஜல்லிக்கட்டில் கலந்து கொண்டிருக்கின்றன.

வாடிவாசலில் வீரர்கள்

இதற்காக அவனியாபுரம் – திருமங்கலம் சாலையில் வாடிவாசல் அமைக்கப்பட்டுள்ளது. இதற்குள் பார்வையாளர்கள் வராமல் இருக்க தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. முன்னதாக காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்கள் மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்பட்டன. 730 மாடுபிடி வீரர்கள் பல்வேறு குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளனர்.

சீறி வரும் காளைகள்

இவர்கள் ஒருமணி நேரத்திற்கு ஒரு குழு என ஜல்லிக்கட்டு உறுதிமொழி எடுத்துக் கொண்டு களத்தில் இறங்கி வருகின்றனர். ஜல்லிக்கட்டு போட்டியை வர்ணனையாளர்கள் மிகச் சிறப்பான முறையில் வழங்கி வருகின்றனர். இதனைக் கேட்டு மகிழவும், ஜல்லிக்கட்டை கண்டு ரசிக்கவும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் அவனியாபுரத்தில் திரண்டுள்ளனர்.

காளையர்களுக்கு பரிசுகள்

இந்த போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு பல்வேறு ஆச்சரிய பரிசுகள் காத்திருக்கின்றன. ஜல்லிக்கட்டை கண்டு ரசிக்கும் வண்ணம் ஆங்காங்கே எல்.இ.டி டிவிக்களை மாவட்ட நிர்வாகம் அமைத்துள்ளது. இன்று மாலை 4 மணி வரை ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுகின்றன. இதையடுத்து பாலமேட்டில் நாளையும், அலங்காநல்லூரில் வரும் 17ஆம் தேதியும் ஜல்லிக்கட்டு நடைபெறுகின்றன.

மேற்பார்வை குழு

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிகளை மாவட்ட ஆட்சியர் தலைமையில் 8 பேர் கொண்ட குழு மேற்பார்வை செய்து வந்தது. இந்த சூழலில் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் மற்றொரு குழு அமைக்க உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

உச்ச நீதிமன்றத்தில் மனு

இதற்கு தடை விதித்து ஆட்சியர் தலைமையிலான குழு மேற்பார்வையில் ஜல்லிக்கட்டு நடத்த உத்தரவிட வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தெரிவித்துள்ளார்.

-tamil samayam